ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது”  என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எம்பி எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் பதில்  அளித்துள்ளார்.  “ கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா? அவ்வாறெனில் விவரங்களைத் தெரிவிக்கவும், வழங்கப்படாதெனில் காரணங்களைக் கூறவும்” என்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்கு  எழுத்துபூர்வமாக மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நித்தியானந்த ராய் அளித்துள்ள பதிலில்: “ இந்திய குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் பிரிவு 5 இன் படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்திய குடியுரிமை பெற முடியும். அந்த சட்டத்தின் பிரிவு 6 இன் படி இயல்புரிமை ( naturalisation ) அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்திய குடியுரிமையைப் பெற முடியாது” என்று தெரிவித்துள்ளார். 

ஈழத் தமிழ் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமகக் குடியேறியவர்கள் என மறைமுகமாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .   இந்நிலையில் இன்று கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதா குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குடியுரிமை திருத்த மசோதாவின் படி பாகிஸ்தான் ,  ஆப்கானிஸ்தான் ,  மற்றும் வங்காளதேசம் ,  ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது .  

ஆனால் இலங்கையில் உள்ள தமிழர்களின் குடியுரிமை திருத்த மசோதாவில் சேர்க்கப்படவில்லை என்றார்,  இலங்கையில் உள்ள தமிழர்கள் தங்கள் மதத்திற்காக துன்புறுத்தப்படவில்லை, மொழிக்கான மோதல் அது,  அங்கு  தமிழர் பிரச்சனையும் தீர்க்கப்பட்டு விட்டது என்ற அவர்,  மோதலுக்கும் துன்புறுத்தலுக்கு வித்தியாசம் உள்ளது என்றார்.