புதுச்சேரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் விண்வெளி ராக்கெட்டின் பாகம் ஒன்று  சிக்கியுள்ளது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  புதுச்சேரி மாநிலம் வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் நேற்று காலை மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தனர்  அப்போது மீன் பிடிக்க வலையை கடலில் வீசியபோது அவர்களின் வலையில் ஏதோ கடினமான பொருள் தட்டுப்பட்டதை உணர்ந்தவர்கள், பின்னர் அதை கரைக்கு இழுக்க  முடியாததால், திமிங்கலம் போல ஏதோ ராட்சத மீன் சிக்கி இருக்கலாம்  என எண்ணி  கரையிலிருந்த மற்ற மீனவர்களை அழைத்துச் சென்று  வலையை கரைக்கு இழுத்து வந்தனர். 

அப்போது அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.  கரைக்கு கொண்டு வந்த பொருள் ஒரு ராக்கெட்  என தெரிந்தது.  சுமார் 30 அடி நீளத்தில் இருந்த அது ராக்கெட்டின் பாகம் என்பதும் அதன்மேல்  பி. எஸ். ஓ . எம். எக்ஸ். எல் என்றும்  22. 3. 02019 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  பின்னர் ராக்கெட்டை காண ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கடற்கரைக்கு  திரண்டனர் ,  பின்னர் மீனவர்கள் இது குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்,  அதையடுத்து சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப அதிகாரிகள்,  மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் சம்பவ இடத்திற்கு வந்து ராக்கெட்டை ஆய்வு செய்தனர்.

 

பின்னர் அது கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பூமியை கண்காணிக்க ஏவப்பட்ட ரிசாட்-2பி  என்ற செயற்கை கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட்  என்றும்,  அல்லது கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி  எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட்டில் பயன்படுத்திய பி.எஸ்.ஓ.எம்.எஸ்.எல் பூஸ்டராக இருக்கலாம் என தெரியவந்தது.