பணத்தை நம்பியே இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி அதிமுக வேட்பாளர்கள் மீது குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா இதழில் ‘கனிமொழி கருத்தும் கடந்த கால அருவெறுப்பும்’ என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதில், ‘’பணத்தை நம்பியே போட்டியிடுகிறார்கள் என்று கனிமொழி நம்மை பார்த்து குற்றம் சுமத்துகிறாரே... இதோ பார்றா மூட்டை மூட்டையாய், கத்தை கத்தையாய், வேலூரில் அகப்பட்ட பணத்தால் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற தொகுதியின் தேர்தலே நிறுத்தப்பட்டதே, அதற்கு யார் காரணம்?

ரெடிமேட் துணிகளில் விலைசீட்டு தொங்குவது போல வாக்காளர்களின் பெயர், முகவரி, அவர்களின் தொலைபேசி எண் அனைத்து விபரங்களோடு அவர்களின் வாக்குக்களை விலை குறிக்கப்பட்ட விபரங்களோடு தேர்தல் பறக்கும் படையிடம் அகப்பட்டு சிப்பாய் கழகம் நிகழ்ந்த மண்ணில் சந்தி சிரித்த தப்பான தறுதலைகள் யார்? 

சரி அதுபோகட்டும். திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலா என்று ஓட்டுக்களை விலைபேசும் யுக்தியை கண்டுபிடித்த கட்சி தி.மு.க தானே. ஊரூராக கிடா விருந்து நடத்தி கையூட்டு கொடுத்து கூடவே மது புட்டிகளையும் வழங்கி அதனை தடுக்க முனைந்த அன்றைய தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தாவை மிரட்டி இந்திய தேசமே காறி துப்புகிற அளவுக்கு இடைத்தேர்தல் நடத்தி கேவலப்பட்ட கட்சி தி.மு.க தானே. 

இவை யாவிற்கும் உச்சமாக துரைமுருகனின் சம்பந்தியை தமிழக தேர்தல் ஆணையாளராய் உட்கார வைத்துக் கொண்டு சென்னை மாநகராட்சி தேர்த்லில் வாக்களிக்க வந்த மக்கலை எல்லாம் அடித்து விரட்டி விட்டு மொத்த வாக்குச்சாவடிகளையும் கைப்பற்றி தங்களுக்குத் தாங்களே குத்திக் கொண்டு கடைசியில் அந்தத் தேர்தலே செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்திடம் ஓங்கி சுத்தியல் அடி வாங்கிய மூடர் கூடமும் மு.க.கட்சி தானே.

சிரங்குகாரனுக்கு சொரிபவனே சொந்தக்காரன் என்பது போல சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் அன்றைய கழக வேட்பாளர் ராஜகண்ணப்பனி வெற்றியை அபகரித்து மாவட்ட ஆட்சித் தலைவரான தேர்தல் அதிகாரியை மிரட்டி அச்சுறுத்தி தோற்றுப்போன சிதம்பரத்தை வெற்றி பெற்றதாக அறிவிக்க வைத்த வெட்கம் கெட்ட கட்சியும் திமுகவே. 

இப்படி ஓட்டுக்களை விலைபேசுவது வாக்குச் சாவடிகளை கைப்பற்றுவது கள்ள ஓட்டுக்களை பதிவு செய்வது இயை யாவையும் இயலாது போனால் வெற்றி பெற்றவரையே தங்கள் கட்சிக்கு விலைபேசி பிடித்து செல்வது என ஜனநாயக  கேலிக்கூத்துக்களால் பணநாயகம் நடத்துகிற தி.மு.க., கழகத்தை பழிப்பது என்பது ரத்த காட்டேரி தான் சுத்த சைவம் என்பதற்கு சமமே’’என விமர்சித்துள்ளது.