மு.க.ஸ்டாலின் கீழடிக்குச் சென்று, அகழாய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தைப் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து  செய்தியாளர்களிடம் அவர், தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த கீழடியில் நிற்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். இது எனக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் கிடைத்திருக்கும் பெருமை என கூறினார்.

கீழடி ஆய்வின் மூலம் கி.மு.6-ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்களின் நாகரிகம் எப்படி எல்லாம் மேன்மை மிக்கதாக இருந்திருக்கிறது என்பதை, இங்கு கிடைத்திருக்கும் பானை ஓடுகள் மூலமாகவும், அவற்றில் இருந்த எழுத்துகள், தங்கம் - இரும்புப் பொருட்கள், என இவைகள் எல்லாம் மெய்ப்பித்துக்கொண்டிருக்கின்றன  என கூறினார்.

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும் என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். 

ஆனால், இப்போது, தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்படக்கூடிய சூழலை நாம் இன்றைக்கு பார்க்கிறோம் என தெரிவித்த ஸ்டாலின், இந்தியா உருவானதே தமிழகத்தில் இருந்து தான் எனவும் அதிரடியாக தெரிவித்தார்.