தமிழகத்தில்  வரும் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வேலூர் தொகுதியில் திமுக பொருளாளார் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த இரண்டு நாட்களாக துரை முருகனும், அவரது மகன் கதிர் ஆனந்த்தும்  தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இரவு 10.30 மணிக்கு வேலூர் காட்பாடியில் உள்ள காந்திநகர் துரை முருகன் வீட்டுக்கு வந்த 3 வருமானவரித்துறை அதிகாரிகள் வீட்டில் சோதனையிட வேண்டும் என தெரிவித்தனர்.

ஆனால் துரை முருகனும். கதிர் ஆனந்தும் வீட்டில் இல்லை என்றும், அதனால் அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த திமுக சட்டத் துறைச் செயலாளர் பரந்தாமன் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்?  என்ன அடிப்படையில் சோதனை செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளிக்க மறுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட அனுமதிக்க வேண்டும் என பிடிவாதமாக அங்கு நின்றிருக்கின்றனர். ஆனால் தான் ஒரு ஹார்ட் பேஷண்ட் என்றும், அதனால் காலையில் சோதனை செய்யலாம் என அவர்களிடம் துரை முருகன் கேட்டுக் கொண்டார்.

ஆனாலும் அந்த இடத்தைவிட்டு போகாமல் சோதனை செய்தே தீருவோம் என பிடிவாதமாக அந்த அதிகாரிகள் உட்கார்ந்துள்ளனர்.  இது குறித்து தகவல் கிடைத்ததும் திமுக தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் துரை முருகன் வீட்டின் முன்பு குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.