2 நாட்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். பின்னர் துரைமுருகனுக்கு நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்களின் வீட்டிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூரில் கட்டுகட்டாக பணம் சிக்கிய சிமெண்ட் குடோன் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் வசித்து வரும் பூஞ்சோலை சீனிவாசன் துரைமுருகனின் நண்பரும்,பள்ளிகுப்ப பகுதி செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக துரைமுருகன் மகனுக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் மக்களுக்கு பணம் விநியோகம் செய்யும் போது அந்த பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 


 
கைப்பற்றப்பட்ட தொகை எவ்வளவு என்பது இதுவரை தெரியவில்லை. இந்த  நிலையில், துரைமுருகனின் நண்பரான பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும், அவருக்கும் சொந்தமான பல இடங்களிலும் சோதனை  நடத்தியதில் கட்டுக்கட்டாக பணம் சிக்கி உள்ளது. வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் எந்த வங்கியில் இருந்து யாரால் எடுக்கப்பட்டது என விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். தேர்தல் நேரத்தில் சோதனை நடைபெறுவதால் தேர்தல் பணி மேற்கொள்ள முடியவில்லை என குற்றசாட்டை வைத்துள்ளனர். இது  குறித்து மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணை நடைபெறும் என உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.


 இதற்கிடையில் வேலூர் மாவட்டத்தில், துரைமுருகன் மற்றும் அவருடைய நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள், திமுகவின் முக்கிய பிரமுகர் என பல்வேறு நபர்களை குறி வைத்து வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது. தற்போது வரை கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு என்பது கூட எண்ண முடியாத  நிலையில், தொடர்ந்து நடந்தது வரும் சோதனையில் மீண்டும்  எவ்வளவு பணம் கைப்பற்றப்படுமோ என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.