Asianet News TamilAsianet News Tamil

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வாக்குப் பதிவு ! இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம் !!

17 ஆவது நாடாளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளுக்கு இன்னும் சற்று நேரத்தில் அதாவது காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது.

in tamilnadu and puduchery election
Author
Chennai, First Published Apr 18, 2019, 6:30 AM IST

தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இதுதவிர அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

in tamilnadu and puduchery election

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் 18 பேரும், அங்குள்ள ஒரு சட்டசபை தொகுதியில் 8 பேரும் மல்லுக்கு நிற்கின்றனர்.

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து வாக்காளர்கள் அல்லாத வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

in tamilnadu and puduchery election

இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. வாக்காளர் வரவர உடனடியாக ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள். கூட்டம் அதிகமாக இருந்தால், 2 பெண்கள், ஒரு ஆண் என்று மாறி மாறி வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மதிய உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு இடைவிடாமல் நடைபெறும்.

in tamilnadu and puduchery election
இதற்காக தமிழகம் முழுவதும் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு எந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது அந்த தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் 2 மணி நேர இடைவெளியில் பதிவான வாக்கு சதவீத விவரங்கள் வெளியிடப்படும்.

in tamilnadu and puduchery election

ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டு ‘சீல்’ செய்யப்படும். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

அடுத்த மாதம் 19-ந் தேதி, தமிழகத்தில் மீதமுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் அன்றுடன் முடிவடைகிறது. மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Follow Us:
Download App:
  • android
  • ios