நான் 30 வருடங்களுக்கு முன்பு மாவட்ட செயலாளராக இருந்த போதே மருதுகணேஷும் அவரது தாயாரும் கழக பணி ஆற்றினார்கள் என திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர் பாலு நினைவு கூர்ந்ததை கண்டு ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் கண்ணீர் மழையில் குளித்து விட்டார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களை தமிழக அரசியல் கட்சிகள் தேர்வு  செய்து அறிவித்துள்ளனர்.

அதன்படி திமுக வேட்பாளராக வழக்கறிஞர் மருதுகணேஷை அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் தேர்வு செய்தார்.

இந்நிலையில், இன்று டி.எச்.ரோட்டில் அமைந்துள்ள தி.மு.க கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இந்த பணிமனையை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் திறந்து வைத்தார்.

இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு, மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ் சுதர்சனம், மு. சண்முகம், வேட்பாளர் மருதுகணேஷ், பகுதி செயலாளர் ஏ.டி.மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்.கே. நகர் தேர்தல் பணிமனை திறப்புவிழா நிகழச்சியில் வேட்பாளர் மருதுகணேஷ் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நெகிழ்ச்சி பொங்க பேசினார். அப்போது, தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட செயலாளராக இருந்தபோது மருதுகணேஷின் தாயார் பார்வதி நாராயணசாமி மகளிர் அணி நிர்வாகியாக பணியாற்றினார்.

அந்த சமயம் கண் பார்வை இழந்த தன் கணவரையும், குழந்தையாக இருந்த மருதுகணேஷையும் அழைத்துக்கொண்டு மகளிரணியினரை ஒருங்கிணைத்து கழக பணியாற்றுவார்.

சிறுவனாக இருந்த மருதுகணேஷும் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என நினைவலைகளை தூண்டிவிட்டார் டி.ஆர்.பாலு.  

இதைகேட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் உணர்ச்சி வசப்பட்டு மேடையிலேயே கண் கலங்கினார்.