சித்தூர் மாவட்டத்தில், நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகை டூ அரசியல்வாதி :

ஆந்திர அரசியலில் ஃபயர் பிராண்ட் என பெயர் பெற்ற நடிகை ரோஜா, முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். சட்டப் பேரவைக்கு 2 முறை போட்டியிட்டு தோல்வியுற்றார். பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், கடந்த 2014 சட்டப்பேரவை தேர்தலில் நகரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் செங்கா ரெட்டிக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2019 தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் மீண்டும் நகரி தொகுதியில் வெற்றி பெற்ற இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் சித்தூர் மாவட்டத்தில் பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி , நாராயணசாமி ஆகிய இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத்தின் தலைவராக ரோஜா நியமிக்கப்பட்டார்.

விரைவில் அமைச்சர் :

ஆந்திர சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன் மோகன் முன்னிலையில் மாநில நிதி அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் ரெட்டி ரூ.2.56 லட்சம் கோடியில் 2022-23ம் வருவாய் ஆண்டிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் பேசிய முதல்வர் ஜெகன் மோகன், ' இந்த பட்ஜெட்டால். அனைத்து தரப்பினரும் வளம் பெறுவர். விரைவில் அமைச் சரவை விஸ்தரிப்பு இருக்கும். 

இதில், அமைச்சர் பதவிகள் பறி போனால், அவர்கள் வருத்தப்பட கூடாது. அவர்களுக்கு மாநில பொறுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். ஜெகன் மோகன் ஆட்சி பொறுப்பேற்றதும், அமைச்சர் பதவி இரண்டரை ஆண்டுகள் மட்டுமே. அதன் பிறகு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

இதனிடையே ஏப்ரல் மாதம் முதல் ஆந்திராவில் மாவட்டங்களும் 13 லிருந்து 26 ஆக பிரிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அமைச்சர் கட்டாயமாக இடம் பெறுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில், சித்தூர் மாவட்டத்தில், நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.