ஒரு வழியாக மீண்டும் ஆட்சியை பிடித்துவிட்டார் மோடி. மோடியின் அலையால் பா.ஜ.க அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. பா.ஜ.க மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைக்க இருப்பதால் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்ததோடு காஷ்மீர்-இந்தியா பரச்சனையை பற்றி தெரிவித்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடந்த புல்வாமா தாக்குதல், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பாலகோட் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, இந்தியாவில் பொதுத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மோடி தலைமையிலான பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் காஷ்மீர் பிரச்னையில் தீர்வு கிடைக்க சுமூகமான பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக இம்ரான் கான் கடந்த ஏப்ரலில் கூறினார். மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு  முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதில் பாஜ தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், `பொதுத் தேர்தலில் பாஜக, கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். தெற்காசியாவின் அமைதி, வளம், முன்னேற்றத்துக்காக மோடியுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்’ என கூறினார் பாக். பிரதமர் இம்ரான்கான்.