Asianet News TamilAsianet News Tamil

விலை குறைஞ்சிட்டா நாங்க எப்படி கல்லா கட்டுவது?: மாஃபியாக்களால் துறைமுகத்தில் முடங்கிய மலேசிய மணல்! அதிகாரிகள் சொல்வது என்ன?

imported malaysian sand in thoothukudi port was denied for distribution and transportation what happened on that
imported malaysian sand in thoothukudi port was denied for distribution and transportation what happened on that
Author
First Published Oct 31, 2017, 5:50 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


மணல் விலை ஏகத்துக்கும் சென்றுவிட்டது. கட்டுமான நிறுவனங்கள் கதி கலங்கி நிற்கின்றன. மணல் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ளை அடிக்கின்றன மணல் மாஃபியாக்கள். இந்நிலையில், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 54000 டன் மலேசிய மணல் தூத்துக்குடி துறைமுகத்திலேயே முடங்கிப் போய் இருக்கிறது. இதற்கு மணல் மாஃபியாக்கள் அட்டகாசம் ஒருபுறம் என்றால், அவர்களுக்குத் துணை போகும் கனிம வளத்துறை அதிகாரிகள் மறுபக்கம் என்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். 

தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக மலேசியாவில் இருந்து  54 ஆயிரம் டன் வீடுகட்டும் மணல், தூத்துக்குடி துறைமுகத்துக்கு கப்பலில் கொண்டுவரப்பட்டது. இந்த மணல் இப்போது, முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மணலை கனிமவள அதிகாரிகள் துறைமுகத்தில் இருந்து வெளியில் எடுத்துச்செல்ல தடைவிதித்துள்ளனராம். இதற்கு உள்ளூர் மணல் மாஃபியாக்களின் நெருக்கடிதான் காரணம் என்கிறார்கள்.

தமிழகத்தில் சமதளப் பகுதிகள் ஏராளம். பரந்த நிலப் பரப்பில் பாயும் ஆறுகள் குமித்துவரும் மணலும் இங்கே நிறைய இருந்தன. காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி என தமிழகத்தின் முக்கிய ஆறுகள், ஒரு காலத்தில் நீராதாரமாக விளங்கின. அவை கொஞ்சம் கொஞ்சமாக வற்றிப் போக, பின்னர் மணல் ஆதாரமாக விளங்கின. இப்போது மணலும் வற்றிப் போய் மலடாகிக் கிடக்கின்றன பெரும் ஆறுகள்.  எல்லா ஆற்றிலும் இரக்கமில்லாமல் நடந்த மணல் கொள்ளையால், நிலத்தடி நீர்மட்டம் இன்று வெகுவாகக் கீழிறங்கிவிட்டது. இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆங்காங்கு உள்ள உள்ளூர் மக்களின் போராட்டங்களால், ஆற்றில் மணல் அள்ள நீதிமன்றம் தடை விதித்தது. இதன் காரணமாக இப்போது அதிகாரபூர்வமாக ஒரு சில மணல் குவாரிகளே செயல்பட்டு வருகின்றன.
 அவையும் அரசின் கண்காணிப்பில் நடந்து வருகின்றன.

இப்போது கட்டுமான நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருப்பது மணல் தட்டுப்பாடுதான். இதனால் கட்டுமானப் பணிகள் பல இடங்களில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல நிறுவனங்கள் தங்கள் பணிகளை முடிக்க இயலாமல், தாற்காலிகமாக ஒத்திவைத்துள்ளன. இந்தக் கட்டுமான நிறுவனங்களின் வாய்ப்பாக அரசு கண்காணிப்பிலான மணல் குவாரிகளே உள்ளன. இவற்றின் மூலம், அரசு குறைந்த விலைக்கு மணலை வழங்கி வருகிறது. ஆனால், மணல் தட்டுபாட்டை பயன்படுத்தி மாஃபியாக்களோ ஒரு டன் மணலுக்கு 12 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விலை வைத்து விற்கின்றனர். 

இந்நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.ஆர்.எம் ராமையா எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம், மலேசியாவில் இருந்து 55,445 டன் மணலை இறக்குமதி செய்தது. தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக வீடுகட்ட பயன்படும் ஆற்று மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மணல், கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.  சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள  மணலுக்கு சுங்க வரியாக மட்டும் ரூ. 15  லட்சம் கட்டப்பட்டதாம். இந்நிலையில், கப்பலில் இருந்து இறக்கப்பட்டு, துறைமுக வளாகத்தில் கொட்டப்பட்டது மணல். அதில் சுமார் 1000 டன் மணல், கடந்த சில நாட்களாக கேரளாவின் திருவனந்தபுரத்துக்கும் தமிழகத்தில் சில பகுதிகளுக்கும் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

குறிப்பாக, இந்த மணல் விலை, தற்போது தமிழகத்தில் எடுக்கப்பட்டு விற்கப்படும் மணல் விலையை விட மிகக் குறைவுதானாம். மணல் மாஃபியாக்கள், உள்ளூரில் சுமார் 50 மடங்கு விலை ஏற்றி விற்கப்பட்டு வரும் நிலையில், இந்த மணல் விலை குறைவாக வைத்து விற்கப்படுவது பெரும் இடைஞ்சலைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கனிமவளத் துறை அதிகாரிகளின் உதவியுடன் உள்ளூர் மணல் மாஃபியாக்கள் துறைமுகத்துக்குள் இருந்து மணலை வெளியே எடுத்து செல்ல இயலாதபடி முடக்கி வைத்துள்ளனராம். எனவே இறக்குமதி செய்ய்யப்பட்ட அந்த மலேசிய மணல், இப்போதும் துறைமுக வளாகத்திலேயே கிடக்கிறது. இதனால் கட்டுமான நிறுவனங்கள் பல அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றன. 

கடந்த பல வருடங்களாக, தமிழகத்தின் கனிம வளங்களைக் கொள்ளை அடித்து பெருமளவில் முறைகேடாகப் பணம் பார்த்து வந்தனர் மணல் மாஃபியாக்கள்.
அப்போதெல்லாம் உள்ளூர் மக்களும் சமூக ஆர்வலர்களும் அதனை எதிர்த்து போராடியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் உள்ளூர் ஆற்று மணலை வெளி மாநிலங்களுக்கு அனுப்பும்போதும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போதும் கண்டுகொள்ளாமல் இருந்த கனிம வளத் துறை அதிகாரிகள், இப்போது மட்டும் முட்டுக்கட்டைகளைப் போட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். மலேசியாவில் இருந்து இதே போல தொடர்ச்சியாக கப்பல் மூலம் மணல் இறக்குமதி செய்யப்பட்டால் தமிழகத்தில் மணல் விலை குறைவதோடு தமிழக ஆறுகள் சூறையாடப்படுவதும் தடுத்து நிறுத்தப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

இந்நிலையில், தமிழகத்தின் எதிர்கால முக்கியப் பிரச்னையாக உணரப் படும் இந்தப் பிரச்னை குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் கருத்தை அறிய முயன்றோம். இது கொள்கை ரீதியான முடிவு இதில் கருத்து சொல்ல இயலாது என்று கூறும் ஆட்சியர், எந்த ஒரு பொருளையும் இறக்குமதி செய்வதில் சில கொள்கைகள், கட்டு திட்டங்கள் உள்ளன; அதனை இந்த விவகாரத்தில் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்கிறார். 

மேலும், துறைமுகத்துக்குள் தாவர நோய்த் தடுப்புப் பிரிவு, மற்றும் விலங்கு நோய்த் தடுப்புப் பிரிவு என இரண்டு உள்ளன. அதாவது எந்த ஒரு பொருளை இறக்குமதி செய்து கொண்டு வந்தாலும், வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்குள் நோய்த் தொற்றுகள் அந்தப் பொருள்களின் மூலம் பரவாத வகையில் பாதுகாப்பது இவற்றின் நோக்கம். இந்த இரு பிரிவுகளின் ஒப்புகைச் சான்று இந்த மணலுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை இதுவரை அளிக்காததால், மணல் துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லத் தடை இருப்பதாகவும் கூறப்படுகிறது.  
 
இந்நிலையில், இது குறித்து விவரம் அறிய தூத்துக்குடி துறைமுக துணைத் தலைவரை தொடர்பு கொள்ள முயன்றோம். தொடர்ந்து, துறைமுக போக்குவரத்துப் பிரிவு அதிகாரியிடம் இது குறித்துப் பேசினோம். அப்போது அவர், மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இது தொடர்பாக ஒரு கடிதம் வந்ததாகக் கூறினார். இதைத் தவிர வேறு எந்த விவரமும் தனக்குத்  தெரியாது என்று  ஒதுங்கிக் கொண்ட அவர், தனக்குத் தெரிந்த காரணமாகக் கூறியது இதுதான்... மணல் சேமிப்பு, போக்குவரத்து ஆகியவற்றுக்கு  குறிப்பிட்ட அந்த முகவர் மாநில அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு மைனர் மினரல் கன்சஷன் விதி 1959ன் படி, அவர் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது பெறப்படவில்லை என்று ஆட்சியர் தெரிவித்திருப்பதாகக் கூறிய அவர், இன்னொரு தகவலையும்  பகிர்ந்து கொண்டார். ஏற்கெனவே அண்டை மாநிலமான கேரளத்தில் கொச்சின் துறைமுகத்தில் இது போல் வெளிநாட்டில் இருந்து  இறக்குமதி செய்யப்பட்ட மணல் தடுத்து நிறுத்தப் பட்டதாகவும், பின்னர் மாநில அரசின் கனிமவளத் துறை அனுமதியுடன்  அடுத்த இரு கப்பல்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார். 

கேரளத்தில் நிலவி வரும் மணல் தட்டுப்பாட்டைப் போக்க, மாநில அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தில் உள்ள ஆற்று வளத்தைக் காக்கவும், கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் தட்டுப்பாட்டைப் போக்கவும், மணல் தேவைப்படுவோர் வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய தேவையான நடைமுறைகளை மாநில அரசு எளிமைப் படுத்தித் தரும் என்றும், மாநில கனிமவளம் மற்றும்  புவியியல் துறை இது தொடர்பான அனுமதியை அளிக்கும் என்றும் முதல்வர் பிணரயி விஜயன் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில், வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய மத்திய அரசு எந்த விதத் தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 

எனவே, தமிழக ஆறுகளைக் காப்பாற்றவும், கட்டுமானப் பணிகள் தொய்வின்றி நடக்கவும், மணல் விலை குறைந்தாக வேண்டும். அதற்கு தமிழக அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Follow Us:
Download App:
  • android
  • ios