முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து பல மாற்றங்கள் அதிமுகவுக்குள் ஏற்பட்டது. அதிமுகவின் அனைத்து அதிகார மட்டங்களும் , அமைச்சர்களும் , கட்சி நிர்வாகிகளும் கட்சியை காப்பாற்ற வேண்டுமானால் சசிகலா தான் பொதுச்செயலாளர் என்று கூறி ஒரு மனதாக பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். 

மறுபுறம் திடீரென முளைத்தார் தீபா. மருத்துவமனையில் அவர் சண்டை போடும் போதுதான் அவர் கவனிக்கப்பட்டார். அதன் பின்னர் அத்தையின் சொத்துகள் , அத்தையின் சிகிச்சை முறைகள் , மரணம் குறித்து சர்ச்சையை கிளப்பினார் தீபா. 

அப்போதும் தனது வாதத்தை தெளிவாக வைக்காமல் சுற்றிவளைத்து பேசி வந்தார். பின்னர் தான் அரசியலுக்கு வர வேண்டிய தேவை ஏற்பட்டால் கட்டாயம் வருவேன் என்று உறுதியாக தெரிவிக்க ஆரம்பித்த தீபாவுக்கும் தொண்டர் கூட்டம் சேர ஆரம்பித்தது. 

ஜெயலலிதாவின்  இளமை கால தோற்றம் , அதே குரல் ,  நடை போன்றவற்றினால் தொண்டர்கள் ஜெயலலிதாவின் மறு உருவமாக பார்க்க ஆரம்பித்தனர். ஜெயலலிதாவின் சொந்தம் என்பதால் தொண்டர்கள் அவரை வாரிசாக  அரசியலுக்கு  வர வேண்டும் என்று தினம் தினம் வீட்டு முன்னர் ஆயிரக்கணக்கில் கூடி கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

மாவட்ட வாரியாக தினம் தினம் வீட்டு முன்னர் கூடும் பொதுமக்கள் கோஷமிட்டு அரசியலுக்கு வரும் படி கூற ஆரம்பத்தில் சரியாக ரியாக்ட் செய்யாத , செய்ய தெரியாமல் இருந்த தீபா தற்போது மெல்ல மெல்ல தேறி வருகிறார். 

ஜெயலலிதா போன்று பால்கனியில் நின்று  தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவிப்பது , இரண்டு விரல்களை உயர்த்தி தொண்டர்களை நோக்கை கையை அசைப்பது என தயாராகிவிட்டார் தீபா. தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவித்து அமைதியாக இருங்கள் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பேன் என்று கூறுகிறார். 

ஜெயலலிதா போன்று மெதுவாக கூர்மையாக பேசுவது , கவனிப்பது சசிகலா கட்சியை கைப்பற்றியதால் அதிருப்தியடைந்த தொண்டர்கள் அவரை தங்கள் தலைவியாகவே கருத துவங்கிவிட்டனர். தற்போது  அவருக்கு வைத்துள்ள பெயர்  “””  இளைய புரட்சித்தலைவி ‘’””அந்த பெயரை வைத்து அழைக்கின்றனர். 

தீபாவும் தினமும் பேட்டியளிக்க துவங்கிவிட்டார். கேள்விகள் கேட்டால் கூர்ந்து கவனித்து நிதானமாக வார்த்தைகளை எண்ணி பேசுகிறார். நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்கிறார் தீபா.

எம்ஜிஆர் படத்தில் ஒரு பாடல் வரும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஏறுது மெருகு அங்கே என்று வரும் , அந்த வரிகள் தீபாவுக்கும் , சசிகலாவுக்கும் பொருந்துகிறது.