திமுகவுக்கு வாக்களித்தால் உங்கள் கதை முடிந்துவிடும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். 

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “ஆக்கும், காக்கும், அழிக்கும் என்று மூன்று சக்திகள் தாய்மார்களுக்கு உண்டு. பெண்களை, திரெளபதியை தெய்வமாக வணங்கும் மண் இது. ஆனால், 1.76 லட்சம் கோடி ரூபாயை ஊழல் செய்து, திஹார் சிறை சென்றவர், முதல்வரின் தாயாரைப் பற்றி பேசுகிறார். முதல்வரின் எடப்பாடி தொகுதியில் பேசுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 1974-ஆம் ஆண்டில் கிளைச் செயலாளராக இருந்து, படிப்படியாக வளர்ந்து, இன்று அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வளர்ந்தவர் எடப்பாடியார். 
இந்தத் தேர்தலில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமுதசுரபியாகும். அதேபோல பாமகவின் தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான ஓர் ஆயுதம். ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது காப்பி. இந்தத் தொகுதியில் முதல்வரை எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட்கூட வாங்க மாட்டார்கள். நான் சொல்லிதான் துணை முதல்வர் பதவியை மு.க.ஸ்டாலினுக்கே கருணாநிதி கொடுத்தார். இதை மு.க.ஸ்டாலினே என்னிடம் வந்தும் சொல்லியிருக்கிறார்.
தேர்தலில் ஆண்களின் வாக்குகள் குறைவு. பெண்களின் வாக்குகள்தான் அதிகம். எனவே பெண்கள் நினைத்தால் வெற்றிபெற செய்ய வைக்க முடியும். வரம் கொடுத்த சிவனின் தலையிலேயே வரம் பெற்றவன் கை வைத்து சோதிக்க முயன்றதைப் போலவும், விஷ்ணு மோகினி அவதராம் எடுத்துவந்து அழித்ததையும் பற்றிய சிறு கதைகள் உங்களுக்குத் தெரியும். அதுபோலவே திமுகவுக்கு வாக்களித்தால் உங்கள் கதை முடிந்துவிடும்” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred