மேற்பட்ட சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி உள்ளதை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றது திமுகவுக்கு புதிய குடைச்சலை ஏற்படுத்தி உள்ளது. 

மத்திய அரசு மேற்பட்ட சாதியனருக்கு 10% இடஒதுக்கீட்டை நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திமுகவின் இந்த செயல்பாட்டுக்கு அக்கட்சியினரே எதிர்ப்புத் தெரிவித்து புதிய குடைச்சலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் திமுகவை விட்டு பலரும் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் கட்சியை விட்டு வெளியேறினார் தென்காசி ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளரான ஆறுமுகம். பதவி ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு அதன் மூலம் மற்ற சாதியினரின் அனுதாபத்தை பெற்று வாக்குகளை அள்ளிவிடலாம் என்ற தவறான எண்ணத்தில் கணக்குபோட்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மிகவும் மனம் வேதனை அடைவதால் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் கூறினார். 

இந்நிலையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவை கண்டித்து பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் வால்போஸ்டர் அடித்து திமுகவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கன்னியாகுமரி சட்டமன்றத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றில், திமுகவை புறக்கணிப்போம். கடந்த சட்டமன்ற தேர்தலில் பிள்ளைமார்கள், பிராமணர், நாயர் வாக்கு வாங்கி வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் அவர்களே... திமுகவிற்கு எங்கள் வாக்கு வேண்டாமா..? 10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்..? உடனே பதில் சொல்.

இல்லையெனில் திமுகவிற்கு எங்கள் ஓட்டு இல்லை’’ என பிராமணர், பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனட். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போஸ்டரை புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகின்றனர். இடஒதுக்கீட்டை எதிர்த்து போராடும் திமுகவின் கொள்கை பிடிக்காமல் கட்சியை விட்டு விலகுவதும் வால்போஸ்டர்கள் அடித்து ஒட்டி எதிர்ப்பை தெரிவிப்பதும் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்தோடு தலைமையின் செயல்பாடுகளையும் அவர் கடுமையாக விமர்சித்து இருப்பது தலைமையை சூடேற்றி வருகிறது.