இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உபி அரசு தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது. இந்நிலையில், அங்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்த அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக, இந்தாண்டு இறுதியில் நடைபெற இருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலில் சில முக்கிய மாற்றங்கள் செய்ய யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க அம்மாநில அரசு ஆலோசனை செய்து வருகிறது.

இதற்காக, அம்மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்யவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலப் பஞ்சாயத்து ராஜ் துறையின் அமைச்சர் பூபேந்தரா சிங் சவுத்ரி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.பஞ்சாயத்துத் தேர்தல் நெருங்கி வருவதால் அதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.