தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. ஆளும் அதிமுகவும் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது. வாக்குச்சாவடி முகவர்களுக்கான தேர்தல் ஆலோசனை கூட்டங்களை அதிமுக தொடர்ந்து நடத்திவருகிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளில் நடந்த வாக்குச்சாவடிகளில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பங்கேற்றார். 
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் நாங்கள் நல்லாட்சி தருவோம் என கூறுவதில்லை. மாறாக எம்ஜிஆர் ஆட்சியை தருவோம் என்றே கூறுகிறார்கள், அவர்களே எம்.ஜி.ஆர். ஆட்சி என்று கூறுகிறார்கள் என்றால், எம்ஜியாரின் தொண்டர்கள் எந்த அளவுக்கு சிறப்பான ஆட்சி செய்வார்கள் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினால் அதிமுக மீது கூற குற்றச்சாட்டுகள் கூற எதுவும் இல்லை. அதனால்தான் மற்ற கட்சிகளுடன் கூட்டணிடு சேர்த்துக்கொண்டு மு.க. ஸ்டாலின் எங்கள் மீது பழி சுமத்துகிறார். மு.க. ஸ்டாலின் அரசியலில் ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா, தேர்தலில் வெற்றிபெருவோமா எனக் கடுமையாக முயற்சி செய்துவருகிறார். ஆனால், அது வீணாகத்தான் போகும். முதலில் ரஜினி கட்சியைத் தொடங்கட்டும். அதன் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்” என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.