நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலாகட்டும் தற்போது நடக்கவுள்ள 4 தொகுதி இடைத் தேர்லாகட்டும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும்  ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிப் பேசி வருகின்றனர். சில நேரங்களில் அது அளவுக்குமீறி போய்விடுகிறது.
இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து விரகனுார், ஐராவதநல்லுார், வில்லாபுரம் பகுதிகளில்  எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர் ஜெயலலிதா கைரேகை குறித்து அயோக்கியத்தனமான வார்த்தையை இங்கீதமின்றி ஸ்டாலின் கூறி வருவதாக குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பாலாஜியின் முன்னிலையில்தான் , திருப்பரங்குன்றம் வேட்பாளராக போட்டியிட்ட போஸின் வேட்புமனுவில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டு, தேர்தல் அதிகாரியிடம் அளிக்கப்பட்டது.

திமுக  வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், 'கைரேகை தவறு' என தெரிவிக்கவில்லை. 'வாங்கிய முறை சரியில்லை; மருத்துவமனை அல்லது டாக்டர் மூலம் கைரேகைக்கான படிவத்தை ஒப்படைத்திருக்கலாம்' என்ற கருத்தைதான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஆனால் நீதிமன்ற கருத்திற்கு கண், காது, மூக்கு வைத்து, 'கைரேகை முறைகேடாக பெறப்பட்டது' என அயோக்கியத்தனமான வார்த்தையை ஸ்டாலின் கூறியுள்ளார் என தெரிவித்தார்.பொய் பேசுவதற்காக ஒரு அரசியல்வாதிக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்றால் அது கண்டிப்பாக ஸ்டாலினுக்குத்தான் கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழகத்தை சேர்ந்தோருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர அ.தி.மு.க., நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அபாண்டமான குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார். 

நாங்கள் பா.ஜ.,விற்கு ஆதரவுதான்; கூட்டணி அரசில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ்  ஆட்சியில் 14 ஆண்டுகள் அங்கம் வகித்த திமுக எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தந்தது என கேள்வி எழுப்பினார்..