திராவிடக் குப்பைகளை அகற்றும் நேரமிது என பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில், ‘’நமது புண்ணிய தேசத்தில் பெண்களுக்கான தனி மரியாதை எப்போதும் உண்டு. அவர்களை கண்ணியமாகவும், கெளரவமாகவும் நடத்துவதே பாரதப் பண்பு. அப்படிப்பட்ட நமது தேசத்தில் எப்போதும் பெண்களின் கல்வியோ அவர்களது வளர்ச்சியோ தடை செய்யப்பட்டது இல்லை என்பதனை நாம் மறந்துவிடலாகாது.

உலகில் எந்த ஒரு நாட்டிலும், பெண்களை நம்மைப்போல் தெய்வங்களின் அத்தனை வடிவங்களாக பூஜிப்பது இல்லை. நாம் நமது தேசத்தையே பெண்ணின் அம்சமாக, ஒரு தாயாகத்தான் பார்த்து வருகிறோம். அப்படி இருக்க, ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர், அவர்களின் ஊனக் கண்கொண்டு நம் கலாச்சாரத்தைப் பார்த்து, அவர்களது குறைவான புரிதலுக்கு ஏற்ப அதனை மாற்றி எழுத முயன்றனர். 

அவர்களது குறை அறிவால் புகுத்தப்பட்டதே வில்லியம் ஜோன்ஸ் போன்றோரின் மொழியாக்கமான மனு சாஸ்திரம். அந்த குறை புரிதலால் எழுதப்பட்ட நூலை, இங்குள்ள பிரிவினைவாதிகள் சிலர் தமிழாக்கம் செய்து, அதில் குற்றம் காண நினைப்பது விந்தையிலும் விந்தை. இவர்களின் நோக்கம், நம் பண்பாட்டை சிதைப்பது, கலாச்சாரத்தை காணாமல் போகச் செய்வது. காட்டுமிராண்டிகள் போல் வாழ்ந்த மனிதர்கள் இருந்த போதே, உலகிற்கே குருவான நமது தேசத்தின் பெருமையை குலைப்பது. அது மட்டுமே திராவிட சித்தாந்தவாதிகளின் நோக்கம்.

இவர்கள் தொடர் செயல்களை கொஞ்சம் கவனித்தால் இது எளிதில் விளங்கும். மனுசாஸ்திரம் தவறு என வில்லியம் ஜோன்ஸ் எழுதிய புத்தகத்தின் தமிழாக்கத்தை ஆதாரமாக காட்டுவர். சிலர் நீங்கள் மிசா கைதி என்பதற்கு ஆதாரம் தாருங்கள் என கேட்டால், நெஞ்சுக்கு நீதியை ஆதாராமாக உங்கள் முன் நீட்டுவர்.

அய்யன் திருவள்ளுவர் ஒரு கிறிஸ்துவர் என, எங்கிருந்தோ மதம் மற்றம் செய்ய வந்த பாதிரியின் குறிப்புகளைக் காட்டுவர். ஆக மொத்தம் கட்டுக் கதைகளை முதலில் உருவாக்கிவிட்டு, பின்னர் அதனையே ஆதாரமாகக் காட்டுவதில் வல்லவர்கள் இவர்கள். ஆரியர் திராவிடர் என்ற வாதம், பொய் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டாலும், அதனை பிடித்துத் தொங்குவர். உலகில் மிகவும் தொன்மையான சனாதன தர்மத்தை வேரறுப்போம் எனக் கூறிவிட்டு ஒருவர் சாதாரணமாகத் திரியமுடிகிறது என்றால், அது அந்த தர்மம் கற்றுத் தந்த பாடத்தினால்தான். மற்ற மதத்தினர் பற்றி இவர் இப்படி வெறுப்புப் பேச்சினை பேசிவிட்டு, வெளியில் நடமாட முடியுமா என்ன? நிச்சயமாக முடியாது. 

மாற்று மத திருமணங்களில் சென்று, சனாதன தர்மத்தின் நம்பிக்கைகளை கொச்சையாக பேச முடிந்த, இவர்களை அந்த மதத்தினரும் கண்டிப்பதாகத் தெரியவில்லை. மாறாக கள்ள மெளனத்துடன் ரசிக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இதன் விளைவுகள் என்னவாயிருக்கும் என்று அறிந்தே திராவிட அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர். ஆனால் அதனால் ஏற்படும் எதிர்விளைவைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை போலும். 

மத, ஜாதி துவேசம் பேசி ஓட்டரசியல் செய்யும் இது போன்ற சில்லறை அரசியல்வாதிகளை, பொதுத்தளத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியது, இந்த தேசத்தின் புதல்வர்களான அனைவரது கடமையாகிறது. அரசியல் அனாதைகளாய் இவர்களை அலையவிட சாமான்யர்களின் கைகளில் உள்ள மிகப்பெரிய ஆயுதம் வாக்குகள் மட்டுமே. 2021 தேர்தலின் முடிவுகள் சனாதன ஹிந்து தர்ம விரோதிகளின் அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.