கர்நாடகத்தில் எடியூரப்பா பெரும்பான்மையுடன் கூடிய ஆட்சியை தக்கவைத்திருப்பதின் மூலம், எதிர் கட்சிகளுக்கு தான் பலத்தை நிரூபித்துள்ள அதே நேரத்தில்   பாஜகவின்  தேசிய தலைமைகளுக்கு தான்யார் தன்னுடைய செல்வாக்கு என்ன என்பதை அவர் மீண்டும் நிரூபித்து காட்டியிருக்கிறார்.  கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது,   முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி தொடர, 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும் என்று இருந்த நிலையில்,   தற்போது 15 தொகுதிகளில் 12 தொகுதிகளின் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.  

கர்நாடகா சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 இடங்களில் காலியாக உள்ள 17 இடங்கள் போக, தற்போது 208 இடங்கள் உள்ளன.  இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், சட்டப்பேரவையின் பலம் 222 ஆக உயரும்.  அப்போது பெரும்பான்மைக்கு 112 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.  தற்போதைய நிலையில் சபாநாயகர் மற்றும் சுயேட்சை எம்எல்ஏவின் ஆதரவை சேர்த்து பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.  காங்கிரஸ் கட்சிக்கு 66 எம்எல்ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 34 எம்எல்ஏக்களும் உள்ளனர்.  இவை நீங்கலாக பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏ ஒருவரும் உள்ளார். எனவே எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு தொடர, 6 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்த  நிலையில் பாஜக 12 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 

ஏற்கனவே பாஜகவிடம் உள்ள 106 இடங்களுடன் 12 இடங்களிளும் வெற்றிபெறும் பட்சத்தில் 118 இடங்களை பெற்று  அதி பெரும்பான்மையுடன் கூடிய ஆட்சியை எடியூரப்பா தொடர உள்ளார்.  எதிர்தரப்பினருக்கு தன் பலத்தை நிரூபித்துள்ளதைக் காட்டிலும், முதலில்   பாஜகவின் தேசிய தலைமைகளுக்கு தான் யார்.? தன்னுடைய செல்வாக்கு என்ன என்பதை  அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.  இப்படி நாம் கூறுவதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே எடியூரப்பா என்னதான்  பாஜகவின் முகமாக இருந்தாலும் ,  அவரை எப்படியாவது ஒரங்கட்டி விட்டு அவருக்கு நிகராக ஒரு சக்தி வாய்ந்த  தலைவரை கர்நாடகத்தில் உருவாக்க வேண்டும் என்று தேசிய தலைமை விரும்பியதையும் அதற்காக பல முறை எடியை ஒரங்கட்ட திட்டம்போட்ட அரசியல் அதிரடிகளை  அனைவரும் அறிந்ததே. 

ஆனால், எப்போதெல்லாம் எடியை பாஜக புறக்கணிக்க முயன்றதோ அப்போதெல்லாம் கர்நாடகத்தில் பாஜக மன்னை கவ்வியதே வரலாறாக உள்ளது.  அதாவது மற்ற மாநில பாஜக தலைவர்களைப்போல  தேசிய தலைமைகளுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை, கர்நாடகத்தில் பாஜகவை தனி கட்சிபோல நடத்துகிறார் சுயேட்சையாக முடிவுகளை எடுக்கிறார்  என்பதே எடி மீது தேசிய தலைமைகளின் வெறுப்பிற்கான காரணம், இந்நிலையில் கர்நாடகத்தில் 15 சட்டமன்ற இடைத்தேர்தல் எடியூரப்பாவின் அரசியல் பயணத்தில் வாழ்வா சாவா போராட்டமாக எண்ணப்பட்ட நிலையில்,  தற்போது அதிலும் வெற்றி பெற்று கர்நாடகத்தில் தான் யார் தனக்கு உள்ள செல்வாக்கு என்ன என்பதை எதிர் கட்சிகளுக்கு நிரூபித்துள்ள அதே வேலையில். எடியூரப்பா இல்லாமல் கர்நாடகத்தில் தனியாக பாஜக  என்ற ஓன்று இல்லை என்ற செய்தியை தன் தேர்தல் வெற்றி மூலம் சொல்லியிருக்கிறார்.