அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமியே இருக்க வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மாவட்டச் செயலாளர்கள் தங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் குமார் தன்னுடைய ஆதரவு குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், “அதிமுகவுக்கு ஒற்றை தலைமை என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். இதைத்தான் சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினோம். தற்போது அதிமுக இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் சிலர் திமுகவுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கிறார்கள். இன்னொரு பக்கம் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஒரு சிலர் திமுகவை சட்டப்பேரவைக்குள்ளேயே புகழ்வது, புத்தகம் பரிசளிப்பது போன்ற செயல்களில் எல்லாம் ஈடுபடுகிறார்கள். அதிமுகவுக்காக உழைக்கக்கூடியவர்கள் ஒரு பக்கமும், ஒட்டு திண்ணையில் எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்துகொண்டு இருப்பவர்கள் இன்னொரு பக்கமும் உள்ளனர். குறுக்கு வழியில் சிலர் பதவியை பெற்று வருகிறார்கள். இதைப் பார்க்கும் தொண்டர்களின் மனநிலை எப்படி இருக்கும்? பொதுமக்கள் மத்தியில் அதிமுக நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருகிறது. அடுத்து அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அதிமுகவில் நம்பிக்கையான தலைவர் இருந்தால்தான் முடியும். 

எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகளாக முதல்வர் பதவியில் துணிவோடும், தனித்தன்மையோடும் சிறப்பாக ஆட்சியை நடத்தி காட்டினார். எனவே, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். இதுவே எங்களுடைய விருப்பம் ஆகும்” என்று குமார் தெரிவித்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த மாஜி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.