if action not taken minister thangamani take responsibility
மின்சாரம் தொடர்பாக எந்தவிதமான பிரச்னைகளாக இருந்தாலும் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தானே பொறுப்பேற்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வாக்குறுதி அளித்துள்ளார்.
சென்னையில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. அதனால் மக்களின் பாதுகாப்பு கருதி சென்னையில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் மழை இல்லாததால், தேங்கிய மழைநீர் வடிந்துவருகிறது.
இந்நிலையில், சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்வாரிய அதிகாரிகளுடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, சென்னையில் மொத்தமுள்ள 1541 மின் வழித்தடங்களில், பாதுகாப்பு கருதி 128 வழித்தடங்களில் மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் துண்டிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் இன்று மாலைக்குள் மின்சாரம் வழங்கப்படும். தேவைப்பட்டால் வெளிமாவட்டங்களிலிருந்தும் மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சென்னையில் மின்சாரம் சீராக்கப்படும்.
மின் இணைப்பு பெட்டிகள் திறந்திருந்தால் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் தொடர்பான புகார்கள் வந்தும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தானே பொறுப்பேற்பதாகவும் அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.
