பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம் மீது இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ராணுவத்திற்கு முழு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

புல்வாமா தாக்குதலில் 49 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டது இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படையின் 21 மிராஜ் 2000 ரக விமானங்கள் மூலம் சுமார் 1000 கிலோ எடை வெடிபொருள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. 

இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தியா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. 

 

இந்நிலையில், இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாகிஸ்தான் நாடும் ஒருவேளை தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், இந்திய ராணுவத்திற்கு கவனமாக முழு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் எல்லையோரம் அனைத்து பகுதிகள் மட்டுமல்லாமல் நாட்டின் அனைத்து சர்வதேச எல்லையிலும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.