மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல மர்மங்கள் அரங்கேறி வருகின்றன.

அதில் நேபாளத்தை சேர்ந்த காவலர் ஓம்பகதூர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.  

ஓம்பகதூர் கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜும் மற்றொரு நபரான சயானும் வேறு வேறு பாதைகளில் காரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி, கனகராஜ் சேலம் அருகிலும் சயானின் மனைவி மற்றும் குழந்தை பாலக்காடு அருகிலும் உயிரிழந்தனர்.

இதில் சயான் மட்டும் உயிருக்கு போராடி வருகிறார். இந்நிலையில், இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சாமியார் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இவர்கள் அனைவரையும் இயக்கியவர் கேரளாவை பூர்வீகமாக கொண்ட கோவை பர்னிச்சர் வியாபாரி சஜீவன் என சொல்லப்பட்டது.

கொடநாடு எஸ்டேட், போயஸ்கார்டன் பங்களா, சிறுதாவூர் பங்களாவை சார்ந்தவர்களுக்கும், அதிமுக முக்கிய பிரமுகர்களுக்கும், அரசு உயர் அதிகாரிகளுக்கும் சஜீவன் நன்கு அறிமுகமானவர் ஆவார்.

இவர்தான் கொடநாட்டின் இன்டீரியர் என்று சொல்லப்படும் உள் அலங்கார வேலைகளான ஜெயலலிதாவின் கட்டில், பீரோ உள்ளிட்டவற்றை மரப்பொருட்களால் செய்து கொடுத்தவர் ஆவார்.

கடந்த பத்து வருடங்களாவே சசிகலாவுடன் வியாபார தொடர்பில் இருந்த  சஜீவன் கொடநாட்டை பொறுத்தவரை ஒரு அதிகார மையமாகவே வளம் வந்துள்ளார்.  

இந்நிலையில், கொலை தொடர்பாக விசாரணைக்கு பயந்து சஜீவன் துபாய்க்கு தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் பரவின.

ஆனால் , இரண்டு நாட்களுக்கு உள்ளாக பத்திரிக்கையாளர்களை அழைத்து தனது தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார் சஜீவன்.

கொடநாடு கொலையிலும், கனகராஜின் மரணத்திலும், தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சசிகலா, ஜெயலலிதாவை பொறுத்தவரை தனக்கு கடவுள் போன்றவர்கள் என்றும் சசிகலாவுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன் எனவும் சசிகலாவால் பலனடைந்த சஜீவன் பேட்டியளித்துள்ளார்.

கொடநாடு பங்களாவிற்கு அடிக்கடி தான் சென்று வந்ததாகவும், ஆனால் ஜெயலலிதா மற்றும் சசிகலா கொடநாட்டில் இருந்தால் மட்டுமே கோவையில் இருந்து கொடநாட்டிற்கு நாள்தோறும் சென்று வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.  

இந்த கொலையில் தனது பெயர் தொடர்புபடுத்தபட்டிருக்கும் செய்தி  பத்திரிக்கையில் வெளியானதை அறிந்ததும் துபாயில் இருந்து விரைந்து வந்ததாக சஜீவன் பேட்டி அளித்துள்ளார்.