உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில், அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் கட்சியின் பூத் கமிட்டி வேலைகள், மாவட்டச் செயலாளர்களுடன் கட்சிப் பணி பற்றிய ஆலோசனைகள் என அடுத்ததுத்து  தீவிரமாக இறங்கியுள்ளார். மேலும், தேர்தலிலும் போட்டியிடுவேன் என்று அறிவித்திருப்பது அக்கட்சியின் இளைஞர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழாவை தே.மு.தி.க. வடசென்னை மாவட்டம் சார்பில் புதுவண்ணாரப்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்றார். அப்போது விஜயகாந்த் உடல்நலம் பெற பிரார்த்தனை நடந்தது. விழாவில் விஜயபிரபாகரன் நலத்திட்ட உதவி மற்றும் பிரியாணிகளை வழங்கினார். ஆதரவற்ற குழந்தைகள் கருணை இல்லத்துக்கு நிதி உதவி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், “கேப்டன் விரைவில் பூரண உடல் நலம் பெற்று திரும்பி வருவார். மக்களவைத் தேர்தலில் அவரது ஆலோசனை அறிவுரை பின்பற்றி செயல்படுவோம்” என்றார்.

நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “கேப்டன் கேட்டுக் கொண்டால் யாரை எதிர்த்து வேண்டுமானாலும் தேர்தலில் நிற்க நான் தயார். யாரைப் பார்த்தும் நான் பயப்பட மாட்டேன், எதற்கும் முடியாது என்று சொல்லமாட்டேன்” என கூறியுள்ளார்.