விஷக்கிருமியான டி.டி.வி.தினகரனை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன் என சசிகலாவின் சகோதரர் தடாலடி கிளப்பி உள்ளார். 

சசிகல சிறைக்கு சென்ற பிறகு டி.டி.வி.தினகரனுக்கும் அவரது தாய்மாமாவான திவாகரனுக்கும் கருத்து மோதல் உருவானது. அது உக்கிரமாகி வலுத்ததால், திவாகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக சசிகலா அறிவித்தார். இதனால் ஒதுங்கிய திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்கிற கட்சியை ஆரம்பித்தார். அவ்வப்போது அதிமுகவிடம் நெருக்கம் காட்டும் திவாகரன் டி.டி.வி.தினகரனை கடுமையாக எதிர்த்து வருகிறார். 

இந்நிலையில் திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், ’’அமமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வருகின்றன. இது உண்மையா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் தினகரன் அனைவரையும் கஷ்டப்படுத்தி வருகிறார். இம்சைப்படுத்துகிறார். கிச்சன் கேபினட் நடத்துகிறார். தினகரன் நடத்துகின்ற அமமுக ஒரு மூழ்கும் கப்பலாக உள்ளது. கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கும், அமமுகவுக்கும் சரிசமமான வாக்குகள் இருப்பதாக வருகின்ற தகவல், தினகரன் ஆதரவாளர்கள் திட்டமிட்டு வதந்தியை பரப்பி விடுகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டியதில்லை.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய எனது கட்சி ஒரு தடையாக இருக்காது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விவசாய பகுதியான காவிரி டெல்டாவில் செயல்படுத்த வேண்டியதில்லை. இதனை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க நான் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை.

அண்ணா திராவிடர் கழகம் அண்ணாவின் கொள்கைகளை ஏந்தி அனைத்து கட்சிகளுக்கும் நன்மதிப்பு கொடுத்து வருகிற இயக்கம். வி‌ஷக்கிருமியாக உள்ள தினகரனை எந்த காலத்திலும் மன்னிக்க மாட்டேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.