i will eat chicken in puzhal prison says deepak
’வெச்சு செஞ்சுட்டிருக்காங்களோ தீபக்கை!?’ என்று நினைக்க தோண்றுகிறது அவரது செயல்பாடுகளும், பேச்சும்!
அ.தி.மு.க.வில் எடப்பாடி அணி, சசி அணி, பன்னீர் அணி, தினகரன் அணி, தீபா அணி என்று ஏகப்பட்ட அணிகள். ’இந்த வாரம் தீபா வாரம்!’ என்பது போல் வாரம் ஒரு அணி ஏதாவது அதிர்ச்சிகரமாகவோ, அசமந்தமாகவோ எதையாவது செய்து ஏழரையை கூட்டுகிறார்கள்.
அந்த கோமாளித்தனத்தையும் கொஞ்சம் கூட லாஜிக் பார்க்காமல் ‘பிரேக்கிங், பிக் பிரேக்கிங்’ என்று பில்ட் அப் கொடுத்து டி.ஆர்.பி.யை ஏற்ற முயலுகிறது ஒவ்வொரு சானலும்.
அந்த வகையில் கடந்த வாரம் போயஸ்கார்டனில் தீபா ஆடிய கதகளியின் ஆரவாரம் இப்போது வரை அடங்கவில்லை. தீபாவின் புண்ணியத்தில் அ.தி.மு.க.வின் பர்சனல் பக்கங்கள் சில கிழிபட்டு வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றன.

போயஸ்கார்டனின் ‘வேதா நிலையம்’ விமர்சனத்துக்குஉள்ளாகி அலசப்படுகிறது, தீபா - மாதவன் - ராஜா எனும் முக்கோண நிலை முக்காடெல்லாம் போடாமல் மிக வெளிப்படையாக அலசப்படுகிறது. அதைத்தாண்டி ஜெ.,வின் அண்ணன் மகனும், தீபாவின் தம்பியுமான தீபக் எந்த மறைவுமின்றி வெளிப்பட்டிருக்கிறார் இந்த சூழலில்.
அ.தி.மு.க. பற்றிய விவகாரங்களை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு தீபக்கை மட்டும் தனியாக எடுத்து அலச வேண்டியதன் அவசியங்கள் நிறைய இருக்கின்றன. காரணம்? புறமும், அகமுமாக நிறையவே மாறியிருக்கிறார் அந்த இளைஞர். மாற்றப்பட்டிருக்கிறாரா என்றும் சொல்லத் தோண்றுகிறது.
சற்றேறக்குறைய ஆறு மாதங்களுக்கு முன் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கின் போது இருந்த தீபக்கிற்கும், கடந்த ஞாயிறன்று வெளிப்பட்ட தீபக்கிற்கும் தோற்றத்தில் எவ்வளவு அநாயச மாற்றங்கள்...மன்னிக்கவும் எவ்வளவு அதிர்ச்சிகரமான மாற்றங்கள். பால் வடியும் முகத்துடன் பப்ளி பாயாக இருந்த தீபக் இந்த அரைவருட இடைவெளியில் எவ்வளவு முதிர்ந்திருக்கிறார்.

ஏதோ ஒரு ’பழக்கம்’ அவரை மிக மிக முழுமையாக ஆட்கொண்டதன் விளைவே அவர் இவ்வளவு சீக்கிரம் முதிர்ந்ததன் காரணமாக இருக்குமோ? என்று கேட்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இதை அப்படியே புறந்தள்ளிவிட முடியவில்லை. தீபக்கின் பேட்டி கிளிப்பிங்குகள் சோஷியல் மீடியாக்களில் பகிரப்படுகின்றன. அந்த வீடியோக்களின் கீழே சிலர் ரகம் ரகமாக கமெண்டுகளை போட்டு சாத்தியிருக்கிறார்கள்.
அதில் ஒருவரும், தன்னை டாக்டர் என்று அடையாளப்படுத்திக் கொண்டவருமான நபர் ‘குடியே கதின்னு கிடக்கிறாரோ தம்பி?! இல்லவேயில்லைன்னு சொல்லி மக்களை ஏமாத்திடலாம். ஆனால் என்னை மாதிரி மருத்துவர்கள் பார்த்த மாத்திரத்தில் சொல்லிவிடுவோம்.
கவனம் தீபக்! என்று அக்கறையோடு சிலவற்றை உடைத்துப் பேசியிருக்கிறார். இவரை தொடர்ந்து பேசும் இன்னொரு நபர், ‘இவாராக அந்தப் பழக்கத்துக்குள் நுழைந்தாரா அல்லது அப்படியாக்கப்பட்டு இருக்கிறாரா? பிற்காலத்தில் சொத்து, கட்சி, அதிகாரம் என்று எதற்கும் பங்கு கேட்டு வந்து நிற்க கூடாது என்பதற்காக தீபக்கை திட்டம் போட்டு வெச்சு செய்றாங்களா சில பேர்?’ என்று கேட்டிருக்கிறார்.
தவிர்க்க முடியாத விமர்சனங்கள்தான் இவை!
இதைத்தாண்டி ஜெயலலிதா, தீபா, சசி ஆகியோறைப்பற்றிய தீபக்கின் நிலைப்பாடு அதிர்ச்சியளிக்கிறது. இம்மூவர் பற்றி தன் முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு கொஞ்சமும் யோசிக்காமல் பதில்களை கொட்டும் தீபக் அ.தி.மு.க.வின் லேட்டஸ்ட் காமெடியனாகி இருக்கிறார் என்கிறார்கள் விமர்சகர்கள்.
மீடியாவிடம் பேசியிருக்கும் தீபக்...
’’ என் மேலே தீபா புகார் சொல்றாங்களா? சொல்லட்டும். இந்நேரம் என் மேலே கம்ப்ளெயிண்ட் ஏதாச்சும் கொடுத்திருந்தாங்கன்னா பரவாயில்லை. நான் பாட்டுக்கு ஹேப்பியா சரணடைஞ்சு, புழலுக்குள்ளே போயிருப்பேன். சிறையில சிக்கனெல்லாம் போடுறாங்க, அதை அப்படியே சாப்பிட்டு போவேண்டிதான் (ஆசாரமான, மடியான ஜெயலலிதா வீட்டுப் பையன் பேசும் பேச்சை பார்த்தீர்களா?) .

தீபா நம்ம பிரதமர்ட்ட போயி முறையிடறதுக்கு பதிலா பிரிட்டன் பிரதமர்ட்ட போயி புகார் சொல்லலாம். ஏங்க, மோடிக்கு வேற வேலை கிடையாதா? எங்க குடும்ப சண்டைக்குள்ளே வந்து தீர்வு சொல்றதுதான் வேலையா!
தினகரன், சசிகலாட்ட பணம் வாங்கிட்டு முன்னாள் முதல்வரான எங்க அத்தை ஜெயலலிதாவை நாந்தான் கொன்னேன்னு தீபா இப்ப சொல்லுறாங்களே இந்த ஆறு மாசமா இதை ஏன் சொல்லல? பிரதமருக்கு இது தொடர்பா ஒரு லெட்டரோ, இமெயிலோ ஏன் அனுப்பல? எல்லாம் நடிப்புங்க.
ரோட்டுல ஸ்டண்டு அடிக்கிற தீபா மாதிரி ஆளுங்களாலே அ.தி.மு.க.வுக்கு எந்த பிரச்னையும் வரப்போறதில்ல. இப்போ தீபா , இதுக்கு முன்னாடி ஜானகியம்மா அவங்கயிவங்கன்னு லட்சம் பேர பார்த்தாச்சு.
எந்த ஆளுமையையும் யாரோடயும் கம்பேர் பண்ணக்கூடாதுங்க. கலைஞர் கருணாநிதி பெரிய ஆளுமையான தலைவர் தான் அவரை நான் எங்க அத்தை கூடவே கம்பேர் பண்ண மாட்டேனே. கலைஞர் மாதிரியான ஆளுமை தி.மு.க.வுல இனி யார் இருக்கிறாங்க சொல்லுங்க? ஸ்டாலின் இருக்கிறார் ஆனால் அவரு கலைஞர் அளவுக்கு திறமையான ஆளுமை கிடையாது.
ஜெயலலிதாவின் வாரிசுன்னு சொல்லிட்டு தீபா பண்றதெல்லாம் காமெடி. வாரிசுன்னா அது வேற மாதிரி பர்ஃபார்ம் பண்ணனும். ஸ்டாலின் மாதிரி பண்ணணும், அழகிரி அண்ணன் மாதிரி பண்ணனும்.

அதேமாதிரி இன்னொரு விஷயம். ஜெயலலிதாவோட வாரிசு சசிகலான்னு சொல்றதையும் ஏத்துக்க முடியாது. சசிகலாவை தன்னோட அரசியல் வாரிசா அம்மா சொல்லிட்டு போனாங்களா? இல்லைதானே! சசிகலாவ யாரும் எலெக்டும் பண்ணல, அவங்க சட்டசபைக்கும் போகல, அவங்கள ஒரு மெம்பராகவே ஏத்துக்கல. அதனால வாரிசுன்னு சொல்றது வேஸ்ட். இந்த கட்சி ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.ன்னு இருந்தே அருமையா இருக்கும், அட்டகாசமா இருக்கும்.” என்று பேட்டியை கொட்டியிருக்கிறார்.
சில நேரங்களில் முரணாகவும், சில நேரங்களில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமலும், சில நேரங்களில் சிக்கி பின்வாங்குவதுமாய் தீபக் பேசியிருப்பவை ஜெயலலிதா குடும்பத்து இரத்தம் இப்படி இருக்கிறதே என்று வருத்தத்தை அழுந்த பதிவு செய்கிறது.
ஜெயலலிதாவின் அரசியல் சாணக்கியத்தனம், அவரது அண்ணன் மகன் என்கிற அடிப்படையில் தீபக்கின் மரபணுவில் இருக்கலாம். அதை மழுங்கிடச்செய்யாமல் தட்டி எழுப்ப வேண்டும் தீபக். தன்னை திருத்திக் கொண்டு, கொஞ்சம் சிந்தித்து நடந்தால் சசி அணிக்கு இன்னொரு வைரி கட்சிக்குள்ளேயே உருவாவார். அல்லது ஒரு ‘பாஸிங் கிளவுட்’ ஆக தீபக் சட்டென கடந்து போவார் அ.தி.மு.க.வை என்பது தெளிவாக புலனாகிறது.
