விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை எப்போதும் அண்ணன் திருமாவளவன் என்று தான் அழைப்பேன், ஆனால் அவர் பேசிய பேச்சுக்கு பிறகு  எப்படி எவ்வாறு அழைக்க முடியும் என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவின் பலம் அறிந்தே போலீசார் தங்களை  கைது செய்திருப்பதாகவும் குஷ்பு பேட்டி கொடுத்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் சமஸ்கிருதத்தில் பெண்களை இழிவு  ஈடுபடுத்தி எழுதியுள்ள கருத்துக்களை தோளுரித்தார் இது பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்திவிட்டார் என அவருக்கு எதிராக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். அதைத்தொடர்ந்து திருமாவளவன் மீது புகார் கொடுத்தனர். இந்நிலையில் அவர் மீது 5 பிரிவுகளில்  கீழ் தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை திமுக, மதிமுக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்கட்சியினர் கண்டித்தனர் வழக்கை திரும்ப பெற வேண்டும்  என வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் அவரது தொகுதியான சிதம்பரத்தில் போராட்டம் நடத்த  திட்டமிடப்பட்டிருந்தது. சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் இந்த போராட்டத்திற்கு தமிழக போலீசார் தடை விதித்தனர். இந்நிலையில் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை காரில் புறப்பட்டுச் சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் கைது செய்தனர். முட்டுக்காடு அருகே சுந்தரவதனம் எஸ்.பி தலைமையிலான போலீஸ் குஷ்புவை கைது செய்தது. அதைத்தொடர்ந்து வீடியோ வெளியிட்ட நடிகை குஷ்பு  இந்திய அரசு அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டப்படி தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

அரசியலமைப்பு சட்டப்படி தான் மோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட மனுதர்மத்தை கொண்டு வந்து அதில் பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்தி இருக்கிறது என திருமாவளவன் தற்போது பேசுவது எந்த லாபத்திற்காக.?  அதை மேற்கோள் காட்டி அவர் பேசியிருப்பது பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. நான் அவரை எப்போதும் அண்ணன் திருமாவளவன் என்று தான் அழைப்பேன், ஆனால் அவர் பேசிய பேச்சுக்கு பிறகு அவரை நான் எப்படி அண்ணன் என்று அழைக்க முடியும் என அவர்  கூறியுள்ளார். பாஜகவின்  பலத்தை அறிந்தே போலீசார் என்னை கைது செய்துள்ளனர். இதைக் கண்டு விடுதலை சிறுத்தைகள் மகிழ்ச்சி அடைய வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.