எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சசிகலாவுக்கு முக்குலத்தோர் புலிப்படை என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என திருவாடனை தொகுதி எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவருமான கருணாஸ் கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்எல்ஏ கருணாஸ்;- எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வர் வேட்பாளராக அதிமுக தேர்வு செய்திருப்பது அவர்களது உரிமை. அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்துள்ளதற்கு மனப்பூர்வ வாழ்த்துகள் என்றார். சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை தனிச்சின்னம் வழங்கப்படவில்லை. 

முக்குலத்தோர் பெருவாரியாக இருந்தாலும் ஆண்டாண்டு காலமாக திராவிடக் கட்சிகளுக்கு அடிபணிந்து கிடக்கும் நிலையில்தான் இருக்கிறது. ஆனால், தங்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று முக்குலத்தோர் கருதுகின்றனர். எனவே, தேர்தல் நிலவரத்தைப் பொறுத்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.

மேலும், விடுதலைக்குப் பிறகு அதிமுகவின் தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்பார் என்று பரவும் தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ஊகத்துக்குப் பதில் கூற முடியாது. உட்கட்சி விவகாரத்தில் கருத்து கூற முடியாது. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுடன் நீண்ட நாள் உடனிருந்து, அதிமுகவின் அனைத்து நகர்வுகளிலும் முக்கியப் பங்காற்றியவர் சசிகலா. எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சசிகலாவுக்கு முக்குலத்தோர் புலிப்படை என்றைக்கும் உறுதுணையாக இருக்கும்" என்று கருணாஸ் தெரிவித்தார்.