எதிர்காலத்தில் நிச்சயமாக நான் அரசியலுக்கு வருவேன் என்று இயக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆண்டுதோறும் அரசு சார்பில் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழாவில் சிறந்த படமாக இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' தேர்வானது. இதற்கான விருதைப் பெற்றுக்கொண்டு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசினார். “எப்போதும் ரொம்ப கூல் ஆக இருந்தால் வெற்றி பெற முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் கஷ்டப்பட்டுதான் வெற்றி பெற்றேன். நடிக்க ஆசைப்பட்டுதான் சினிமாவுக்குள் வந்தேன். ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்தே இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளரானேன்.

உண்மையில் எனக்குத் தன்னம்பிக்கையை வளர்த்தது என்னுடைய அப்பாதான். தொடக்கத்தில் என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை. ஆனால், நான் சினிமாவில் வெற்றி பெறுவேன் என்று என்னுடைய அப்பா நம்பினார். என் அப்பா ஒரு போஸ்ட்மேன். அதனால்தான் 'தாவணிக் கனவுகள்' படத்தில் போஸ்ட்மேனாக நடித்தேன். அவர் புற்றுநோய் வந்து கஷ்டப்பட்டார். நான் முன்னுக்கு வருவேனா என்ற குழப்பம் எனக்கு இருந்தது. நிறைய அப்பாக்களின் கனவே, தன் பிள்ளையை உயரத்தில் வைத்து பார்க்க என்று ஆசைப்படுவதுதான். என் பூஜை அறையில் உள்ள ஒரே சாமி படம், என் அப்பாவின் போட்டோதான்.

