கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 12ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான் இன்று குணமடைந்து இல்லம் திரும்பிவிட்டேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

 என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பல்வேறு அரசியில் கட்சி தலைவர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் குணமடைந்துள்ள செய்தி அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு நாளொன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகிய மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிபிஐ முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனுக்கு  கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியானதை  அடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தான் நலமாக உள்ளேன் என அக்டோபர் 12ஆம் தேதி அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அவர் தொற்றால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஏராளமானோர், விரைவில் உடல் நலம் பெற்று மீண்டு வர வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 12ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான் இன்று குணமடைந்து இல்லம் திரும்பிவிட்டேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சையளித்த டீன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தோழமை கட்சி தலைவர்கள், ஊடகவியலாளர்கள்,  பத்திரிக்கையாளர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.