I never saw Jayalalitha - Divakaran
மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது அவரை நான் பார்க்கவே இல்லை என்றும் ஆறுமுகசாமி ஆணையத்தில் எனக்கு தெரிந்த உண்மைகளை கூறிவிட்டு வந்துள்ளேன் என்று திவாகரன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பெற்ற அவர் டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அவரது மரணம் குறித்த மர்மங்களை விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டது.

இதன்படி விசாரணை மையத்தின் முன் அப்பலோ மருத்துவர்கள், முன்னாள் - இந்நாள் அதிகாரிகள், ஜெயலலிதாவின் டிரைவர், சமையல்காரர், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.
டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, அம்மா அணி என்ற அமைப்பை அண்மையில் உருவாக்கி இருந்தார் திவாகரன். இந்த நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக்குழு, சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியது. இன்று (மே 3) ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திவாரகன், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். சுமார் 3 மணிநேரமாக விசாரணை நடத்தப்பட்டது.
இதன் பின்பு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி, எனக்கு தெரிந்த உண்மைகளை கூறிவிட்டு வந்தேன் என்றார். ஜெயலலிதாவைப் பார்க்க இரு முறை மருத்துவமனைக்கு வந்தேன். இரு முறையும் அவரைப் பார்க்க முடியவில்லை. முதல் முறை நான் வரும்போது இரவு 11 மணி. அப்போது ஜெயலலிதா தூங்கிவிட்டதாக கூறினர். அதனால் அவரைப் பார்க்க முடியவில்லை. இரண்டாவது முறையாக அதாவது 4 ஆம் தேதி வரும்போது, ஜெயலலிதா இறந்ததாக கூறினர். அப்போது ஜெயலலிதா இறந்ததாக கூறப்பட்டது. சில தொலைக்காட்சிகளிலும் இறந்ததாக வெளியிட்டனர். இரண்டு முறையும் அவரை நான் சந்திக்கவில்லை.
ஜெயலலிதா இறந்தபோது முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுத்தார்கள். முதலமைச்சர் போட்டியில் பலர் இருந்தனர். அவர்களின் பெயரை கூற விரும்பவில்லை என்றார். ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக்குழுவில், ஆதாரங்கள் ஏதும் வழங்கினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆதாரங்கள் எதுவும் வழங்கவில்லை என்றார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமே இல்லை. இயற்கையான மரணம்தான் என்று திவாகரன் கூறினார்.
