நான் தினமும் பசுவின் சிறுநீரைக் குடிக்கிறேன் என்று பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் தெரிவித்துள்ளார். 

 பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் தற்போது தான் நடித்து வரும் ‘பெல் பாட்டம்’ என்னும்  படத்திற்காக ஸ்காட்லாந்தில் படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் ஹ்யூமா குரேஷி மற்றும் லாரா தத்தா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.  டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் ‘இன் டு தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்னும் நிகழ்சிக்காக, அக்சய் குமார் சாகச நிகழ்ச்சித் தொகுப்பாளாரான பியர் கிரில்ஸ் உடன், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியானது வரும் 11-ஆம் தேதியன்று ஒளிபரப்பாக உள்ளது. 


அதற்கு ஒரு முன்னோட்டமாக பியர் கிரில்ஸுடன்  சமூக ஊடகமான இன்ஸ்டாக்ராமில் நடைபெற்ற ஒரு நேரலை உரையாடல் நிகழ்வில் அக்சய் குமார் பங்கேற்றார்.அப்போது ‘இன் டு தி வைல்ட்’ நிகழ்வில் யானையின் மலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தேநீரை அருந்தியது குறித்து நடிகை ஹ்யூமா குரேஷி கேட்ட கேள்விக்கு பதிலளித்த அக்சய் குமார்.., ‘எனக்கு பெரிய அளவில் சிரமங்கள் இல்லை. கவலைப்படும் நிலையில் இல்லாத அளவிற்கு நான் உற்சாகமாக இருந்தேன். ஆயுர்வேத காரணங்களுக்காக நான் தினமும் பசுவின் சிறுநீரைக் குடிக்கிறேன். எனவே எனக்கு இது பரவாயில்லை’."