காவிரி விவகாரம் தொடர்பாக மேலாண்மை வாரியத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
மணமக்களை வாழ்த்திய பின் பேசிய ஸ்டாலின்,
காவிரி பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்ற மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.
இதனை கண்டித்து, நாளை தஞ்சையில் மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தார்.
முதலமைச்சர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை குறைகூற விரும்பவில்லை என்றும், அவர் விரைவில் பூரண குணம் அடைய வேண்டும்என தெரிவித்த அவர்,
ஆட்சிப் பொறுப்பில் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கக் கூடிய நிதித் துறை அமைச்சரோ, பொதுப் பணித்துறை அமைச்சரோ அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டலாம்.
பிரதமரை அனைவரும் சேர்ந்து சந்திக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் ஆனால் அப்படி எந்த நடவடிக்கையிலும் அ.தி.மு.க அரசு ஈடுபடவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை வாங்க தி.மு.க நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை என்றும், உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறவே தி.மு.க வழக்கு தொடர்ந்தது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
