2006ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் நடந்தது போன்ற வன்முறை, கலவரங்கள் துளியுமின்றி மிகவும் அமைதியான முறையில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்தி  மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அளித்த பேட்டி விவரம் : - 25 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பிற அனைத்து இடங்களிலும் தேர்தல் அமைதியான முறையில் பாரபட்சமின்றி நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டுள்ளது, அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் மூலம் நேரில் பெறப்பட்ட 712 புகார் மனுக்கள் மீதும், தொலைபேசி வாயிலாக பெற்ற 10,82 புகார் மனுக்கள் மீதும் உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துரிதமாக எடுத்த  சீரிய நடவடிக்கைகள் மூலம்   அனைத்து அரசியல் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் திருப்திப்படுத்தி உள்ளது. 91,975 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சில இடங்களில் வேட்பாளர்களின் இறப்பு காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,  99.9 சதவீத முடிவுகள் வெளியிடப்பட்டு  வெற்றி பெற்றவர்களுக்கு  சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. 

முந்தைய தேர்தல்களை விட மிக அமைதியான முறையில் இரு கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பாரபட்சமின்றி நடத்தப்பட்டுள்ளது.   விரைவில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று அப்போது அவர் கூறினார். ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைவில் நடத்தப்படும் என்றும் ஆணையர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.