ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 3 மணி நேரமாக நடைபெற்றது. 

கடந்த சில மாதங்களாகவே ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் நீக்கப்பட்டு வந்தார்கள். ரஜினிக்கு தெரியாமல் இந்த நீக்கம் இருந்ததாக மன்றத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதனைத் தொடர்ந்து ரஜினி வீட்டை அவர்கள் முற்றுகையிட்ட நிகழ்வும் நடந்தது. கடந்த 23 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ரஜினி மன்ற நியமனங்கள், மாற்றங்கள், தற்காலிக மாற்றங்கள் எல்லாமே தனக்கு தெரிந்துதான் நடக்கிறது என்று அதில் கூறியிருந்தார். ரஜினியின் இந்த அறிக்கையால், அவரது ரசிகர்கள் மேலும் கொதிப்படைந்தனர்.

 

இந்த நிலையில்தான், நடிகர் ரஜினிகாந்த், மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு, ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். என்னை வாழவைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு என்று தொடங்கிய அந்த அறிக்கையில்,கடந்த 23 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சில உண்மைகள் சொல்லியிருந்தேன். அதில் கசப்பான உண்மையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

உங்களைப் போன்ற ரசிகர்ககளை நான் அடைந்ததற்கு பெருமைப்படுகிறேன். என்னையும், உங்களையும் யாராலும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும் என்றும், இறுதியாக ஆண்டவன் நமக்கு துணை இருப்பான் என்று ரஜினி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.