I came to meet Brother Stalin - Telangana CM Chandrasekara Rao
சகோதரர் ஸ்டாலினை சந்திக்க வந்ததாகவும், அரசியல் அணி சேர்க்கைக்காக அல்ல என்றும் தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறினார்.
தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியை அமைக்கும் பணியில் தெலங்கான முதலமைச்சரும், தெலங்கான ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவ் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்த நிலையில், சந்திரசேகர ராவ், இன்று சென்னை வந்தார். தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியாக உள்ள திமுகவின் ஆதரவைப் பெறுவதற்கு, சந்திரசேகரராவ் சென்னை வந்தார். சென்னை வந்த அவர், கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்குச் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஸ்டாலின் வீட்டுக்குச் சென்ற சந்திரசேகர ராவ், மூன்றாவது அணி குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், ஸ்டாலின் உள்ளிட்டோருடன் மதிய உணவை எடுத்துக் கொண்டார்.
இதன் பின்னர், அரசியல் சூழ்நிலை குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ள்னர். இந்த சந்திப்பு 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பங்கீடு பெறுவது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் சந்திரசேகரராவ், ஸ்டாலின் கூட்டாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், தெலங்கான முதலமைச்சருடன் மதிய உணவு அருந்திய பின்னர், நீண்ட நேரம் அரசிய்ல சூழ்நிலை குறித்து விவாதித்தோம். அதன் அடிப்படையில் முக்கியமாக மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவது, மாநிலங்களுக்கு கூடுதல் உரிமையை பெறுவது அதாவது மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்பது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பெறுவது உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம்.
மத்திய அரசின் சர்வாதிகார போக்கு குறித்து நீண்ட நேரம் பேசினோம். இது ஆரோக்கியமான பேச்சுவார்த்தை. இது முதல் கட்ட பேச்சுவார்த்தைதான். இதுபோன்ற பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். தமிழகத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் உள்ளது. திமுக, பொதுக்குழு, செயற்குழு, நிர்வாகக்குழு, உயர்நிலைக்குழு உள்ளிட்டவைகளோடு இது குறித்து பேசுவேன். ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
விரைவில் திமுக முன்னின்று நடத்தக்கூடிய மாநில சுயாட்சி மாநாட்டை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறேன். அது குறித்து விவாதித்து முடிவெடுக்கலாம் என்று சந்திரசேகரராவ் எங்களிடம் கூறியிருக்கிறார் என்று ஸ்டாலின் கூறினார்.
இதைத் தொடர்ந்து தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேசினார். அப்போது, எனது சகோதரர் ஸ்டாலினை சந்திக்க வந்ததாக கூறினார். கருணாநிதியின் ஆசியைப் பெறுவதற்காகவே தான் வந்தேன். மாநிலத்துக்கு மத்தியில் இருந்து பெறப்படும் கூடுதல் நிதியை பெறுவது குறித்து பேசினோம். மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை பெறுவது குறித்து விவாதித்தோம்.
ஸ்டாலினோடு பேசுவது இது முதலும் அல்ல; கடைசியும் அல்ல. இந்தியா மதச்சார்பற்ற நாடாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. விரைவில் மீண்டும் சந்தித்து பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிப்போம்.
விவசாயிகளுக்காக தாம் புதிதாக அறிமுகம் செய்யும் திட்ட தொடக்க விழாவில் ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு விடுத்தேன். தாங்கள் 3-வது அணியோ, 4-வது அணியையோ பற்றி பேசவில்லை. விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர்களின் பிரச்சனை குறித்து மட்டுமே விவாதித்தோம். ஸ்டாலினை சந்தித்தது அரசியல் அணி சேர்க்கைக்காக அல்ல என்றும் தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறினார்.
