பாஜகவால ரொம்ப மனசு வேதனையோட இருக்கேன் … கண்ணீர் விட்ட முதலமைச்சர் !!
ஒவ்வொரு நாளும் நரகம்போல் இருப்பதாகவும், பெரும் மன வேதனையுடன் நாட்களை கடந்து செல்வதாகவும் கர்நாடக முதலமைச்சர் குமாராசாமி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் ஹெச்.டி.குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைப்பெற்று வருகிறது. அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக்கீடு போன்றவற்றில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
இதனையடுத்து ஒருபுறம் கூட்டணி கட்சியான காங்கிரஸ், மற்றொரு புறம் பாஜக என இருதரப்பு நெருக்கடியினை சந்திக்க வேண்டிய சூழலில் குமாரசாமி உள்ளார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு குமாரசாமி , எங்கள் கட்சியின் எம்எல்ஏ ஒருவர் எனக்கு போன் செய்து, பாஜக ரூ.10 கோடி தர உள்ளதாகவும், பாஜகவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறினார். இதுபோன்ற செயல்களில் பாஜகவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களாகிய உங்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான், மன வேதனையுடன் கடந்து செல்வதை வெளியில் சொல்ல முடியாது.
ஆனால், கர்நாடகா மாநில மக்களின் பிரச்சனைகளை, வலிகளை நிச்சயம் நான் தீர்க்க வேண்டும். அரசினை சுமூகமாக நடத்தும் கடமை எனக்கு இருக்கிறது என்று குமாரசாமி தெரிவித்தார்.
இதேபோல் சில மாதங்களுக்கு முன் குமாரசாமி தனது கட்சி தொண்டர்கள் மத்தியில், நான் முதல்வராகியும் மகிழ்ச்சியாக இல்லை என அழுதபடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.