பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிட்டதற்காக என் மீது வழக்கு தொடர்ந்தாலும் கவலையில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தகுமார் ஆகியோர் நண்பன் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர், பொள்ளாச்சியில் மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒருவரின் மனைவி, தனியார் கல்லூரிப் பேராசிரியை, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் இளம் பெண்கள், சில குடும்பப் பெண்கள் என 60க்கும் மேற்பட்டோர் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்காக முரசொலின் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம், ஓமலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ''பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?'' என்று கேள்வி எழுப்பினார். 'இல்லை' என்று சிலர் குரல் எழுப்பினர். ''பொள்ளாச்சி சம்பவத்தை மறக்க முடியுமா?'' என்றார். 'மறக்க முடியாது' என்று குரல்கள் எழுந்தன.

''துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன். ஜெயராமன் அதிமுகவைச் சேர்ந்தவர். இதைச் சொன்னதற்கு அவர்கள் என் மீது வழக்கு போடலாம். எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள்; அதைச் சந்திக்கத் தயார். ஏனெனில் நான் கலைஞரின் பேரன்'' என அவர் தெரிவித்தார்.