ஆட்சியை மத்திய அரசு கலைத்தாலும், மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை தூக்கியெறிந்து மதச்சார்பற்ற அணியோடு இணைந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட தயாராக உள்ளேன் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். 

தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் 274 கிணறுகள் அமைக்கப்படவுள்ளது. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் 3 ஆயிரத்து 500 மீட்டர் முதல் 4 ஆயிரத்து 500 மீட்டர் வரை ஆழம் கொண்டதாக இருக்கும். விழுப்புரத்தில் 139 சதுர சிலோமீட்டருக்கு கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் எந்த பணியையும் செய்ய இயலாது. 

மேலும், புதுச்சேரியில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வேதாந்த நிறுவனமோ அல்லது மத்திய அரசு ராணுவ பலத்துடன் வந்தாலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காலத்திலும் அனுமதிக்கபோவதில்லை. ஆட்சியை மத்திய அரசு கலைத்தாலும், மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை தூக்கியெறிந்து மதச்சார்பற்ற அணியோடு இணைந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட தயாராக இருக்கிறோம் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.