ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான எந்த திட்டத்துக்கும் ஒருபோதும் தமிழக அரசு அனுமதி வழங்காது என அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், 2-வது கட்டமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி பேரவையில் திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஒருபோதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதியில்லை என உறுதிப்பட கூறியுள்ளார். 

திட்டம் தொடங்கப்பட்டது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். மேலும் மத்திய அரசு அனுமதி அளித்தாலும் மாநில அரசு ஒருபோதும் தனது உரிமையை விட்டுக்கொடுக்காது. ஹைட்ரோ கார்பன் எடுக்க திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட அனுமதியையே அதிமுகதான் ரத்து செய்தது என்று கூறினார். இதனைத் தொடா்ந்து திமுக, அதிமுக இடையே ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.