தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இன்று சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழகத்தில் 7 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் கூறி உள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இதே கூட்டத்தொடரில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். 

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டம் எந்த வடிவில் வந்தாலும் அனுமதிக்க மாட்டோம், அரசியலுக்காக போராட்டம் நடத்தினால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என கூறினார். 

இடையில் குறுக்கிட்ட மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்துபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் பேசக்கூடாது என மு.க.ஸ்டாலின் கூறினார்.  தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம்,  திட்டத்தை சட்டரீதியாக நிறுத்தவும், தடுக்கவும், சம்பந்தபட்டவர்கள் மீறும்போது, நடவடிக்கை எடுக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது, அப்படி இருக்கும்போது எதற்காக போராட்டம் நடத்த வேண்டும். வான்டடாக சிறைக்கு செல்பவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம் என்று கூறினார். 

மேலும் அவர் பேசுகையில், மாநில அரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த நினைத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது என கூறினார்.