வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், எஞ்சிய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அடுத்த  48 மணி நேரத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும்  பதிவாக கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் கோவில்பட்டி (தூத்துக்குடி) மதுக்கூர் (தஞ்சாவூர்) திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) தல 3 சென்டி மீட்டர் மழையும், கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) முத்துப்பேட்டை (திருவாரூர்) தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதி மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 29 செப்டம்பர் 30 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் மற்றும் அதனை  ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். அப்படி சென்றாலும் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது.