நாடாளுமன்றத் தொடரை வீணடித்த காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துவிட்டு பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் உணவு உண்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வீணடிக்கப்பட்டதை கண்டித்து பிரதமர் மோடி, அமித் ஷா உட்பட பாஜக எம்.பிக்கள் நேற்று உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பல பகுதிகளிலும் பாஜக எம்.பிக்கள் உண்ணா விரதம் இருந்தனர். ஆனால் உண்ணாவிரதம் என அறிவித்த விட்டு பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் சாப்பிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சிங் காலையில் சென்னை சென்ற பிரதமர் மோடி காலை 6:40 மணிக்கு விமானத்தில் காலை உணவு சாப்பிட்டுள்ளார். பிறகு சென்னையில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் பிற்பகல் 2:25 மணிக்கு மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.

சாப்பிட்டுவிட்டு பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருந்தது எப்படி? இதை அவர்தான் விளக்க வேண்டும் இல்லை என்றால் அவர் பொய்கூறி மக்களை ஏமாற்றுகிறார் என்றுதான் அர்த்தம் என குறிப்பிட்டுள்ளார்.

இதுபோலவே கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் பாஜக தலைவர் அமித் ஷா, நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் கடக் கிராமத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். ஆனால் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் உண்ணாவிரதம் இருந்துள்ளதாக பாஜக பெருமை பொங்க கூறுகிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்..

ஏற்கனவே எஸ்சி/எஸ்டி சட்டம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் , காலையிலேயே நன்றாக சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக நடத்திய போராட்டத்தில் வேலூர் அதிமுகவின்ர் மேடைக்குப் பின்னால் பிரியாணியை வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.