மத்திய பாஜகவுக்கு தமிழகமும் கர்நாடகாவும் ஒன்றுதான் என்றும், கர்நாடக தேர்தலுடன் காவிரியை தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் காவிரி விவகாரத்தில் கால அவகாசம் கேட்டதற்கு கலவரத்தை தூண்ட முயற்சிப்பதா என்றும் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் அதிமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. 

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும்  துணை முதலமைச்சர்  ஓ பன்னீர் செல்வமும் கலந்து கொண்டுள்ளனர். அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் எஸ்.கோகுலஇந்திரா, மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் சத்தியா, வி.என்.ரவி, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தஞ்சையில் அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி. வைத்தியலிங்கம் தலைமையிலும், திருப்பூரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையிலும், நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி, கோவையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலும், கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலும், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரி, காரைக்காலிலும் அ.தி.மு.க. அறிவித்த உண்ணாவிரத போராட்டம் அங்குள்ள நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. நாளை மறுநாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. 

தமிழகத்தில் காவிரி நீர் பாயும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜனும், பாஜகவின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜாவும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், ஹெச்.ராஜா, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி வானில் சென்றாலும் கீழே இருந்து மறிப்போம்; கருப்புக்கொடி காட்டி மறிப்போம் என்கிறார்கள். காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டதற்காக கலவரத்தை தூண்ட முயற்சிப்பதா? காவிரி விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நாளில் இருந்துதான் 90 நாட்கள் மத்திய அரசு கால அவகாசம் கேட்டது. பாஜகவுக்கு தமிழகமும், கர்நாடகமும் ஒன்றுதான். கர்நாடக தேர்தலுடன் காவிரியை தொடர்புபடுத்த வேண்டாம் என்று ஹெச் ராஜா கூறினார்.