அப்துல் கலாம் வீட்டிலிருந்து தொடங்கிய அரசியல் பயணத்தின் முதல் பொதுக்கூட்ட அரங்கேற்றத்தை நேற்று மதுரையில் வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கிறார் கமல்ஹாசன். நேற்று மாலை சரியாக 7.25 மணிக்கு மக்கள் நீதி மய்யம் என்று கட்சியின் பெயரையும், சிவப்பு, கறுப்பு, வெள்ளை வண்ணங்களுடன் கூடிய இணைந்த கைகள் கொடியை 40 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில் ஏற்றி அறிமுகம் செய்தார். கட்சிக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு மேடைக்கு வந்த கமல், “இது உங்களுக்கான கட்சி; மக்களுக்கான கட்சி. நான் அறிவுரை சொல்லும் தலைவன் அல்ல; அறிவுரை கேட்கும் தொண்டன். நான் உங்கள் கருவி; தலைவனல்ல” என்றபடியே, ‘மக்கள் நீதி மய்யம்’ என்று தனது கட்சியின் பெயரை அறிமுகம் செய்து வைத்தார்.

கமலின் இந்த அரசியல் கட்சி தொடக்க விழாவே கலக்கலாக இருந்தது. டெல்லி முதல்வர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து, கேரளா முதல்வர் திரையில் தோன்றி வாழ்த்துக்கள் என ஆரம்பமே அதகளம் பண்ணினார் ஆண்டவர். அரசியலில் கால் பதித்த கமல், அதே வேகத்தில் அடுத்தடுத்த விஷயங்களில் அதிராக இறங்கினார். இதில் முதல்கட்டமாக, 8 கிராமங்களை தத்தெடுத்து அவற்றை முன்மாதிரி கிராமமாக்குவோம் என உறுதியளித்தார். 

காவிரி தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கமலுக்கு அரசு அழைப்புவிடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் கமல் மதுரையில் இருந்து இன்று சென்னை வந்தார். ஆனால் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை ஆனாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கட்சியின் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கமலின் கட்சியில் சேருவது எப்படி என சாதரண மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.  கமல் அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கிய நிலையில் அவருடைய கட்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் எப்படி சேரலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. கமல் கட்சியில் சேர விரும்புவோர் மையம்.காம் (www.maiam.com) என்ற இணையதளம் மூலம் உறுப்பினராக சேரலாம் இந்த இணையதள பக்கத்திற்கு சென்றதும் கிராமியமே தேசியம் என்றால் நாளை நமதே என்றும் கமல் அழைப்பு விடுக்கிறார்.

 கட்சியில் இணைய எங்களுடன் இணையுங்கள் என்ற பக்கத்தை கிளிக் செய்தால் அதில் கட்சியில் சேர விருப்பம் உள்ளவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன. இந்த தகவல்களை பதிவிட்ட பின்னர் செல்போனுக்கு வரும் OTP எண்ணை மறுபதிவு செய்தால் நீங்கள் உறுப்பினராக சேர்ந்ததற்கான பதிவு எண் திரையில் தெரியும். அதில் உங்கள் உறுப்பினர் என்னும் வந்ததும் நீங்கள் கமல் கட்சியில் உறுப்பினராகிவிட்டீர்கள்.