அதிமுக- திமுக ஆட்சியில் எப்படி ஊழல் நடக்கிறது என்கிற அடிப்படை விஷயத்தை ரஜினிகாந்த் புட்டுப்புட்டு வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’சிஸ்டம் சரிசெய்யாமல், அரசியல் மாற்றம் செய்யாமல், ஆட்சி மாற்றம் நடந்தால் மீன்குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் அதே பாத்திரத்தில் சர்க்கரை பொங்கல் வைத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கும் அந்த ஆட்சி. ஆகையால் முதலில் அரசியல் மாற்றம் கொண்டு வரவேண்டும். அந்த அரசியல் மாற்றத்திற்கு சில திட்டங்களை வகுத்து இருக்கிறேன். அதில் முக்கியமானது இந்த மூன்று திட்டங்கள். நான் கவனித்ததை சொல்கிறேன். அதிமுக- திமுக ஆகிய இரண்டு முக்கியமான கட்சிகளிலு நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அந்தக் கட்சிகளில் எல்லாபதவிகளையும் சேர்த்து 50 முதல் 60 ஆயிரத்துக்கும்  மேல் கட்சி பதவிகள் இருக்கிறது. 

கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் உழைப்பார்கள் தேவை. தேர்தல் முடிந்த பிறகு அது தேவை இல்லை. அந்த பதவிகள் தேவையில்லை. ஜெயித்து ஆட்சிக்கு வந்துவிட்டால் நாங்கள் ஆளுங்கட்சி எனச் சொல்லி அந்த பதவியில் உள்ளவர்கள் காண்ட்ராக்ட், டெண்டர்கள் என அனைத்திலும் மூக்கை நுழைக்கிறார்கள். அவர்களால் தான் எல்லா விதத்திலும் தவறுகள் நடக்கிறது. அந்த திட்டங்களுக்கு பணம் முழுமையாக போய்ச் சேருவதில்லை. அந்தப்பணம் ஜனங்களிடம்  போய் சேராது. அது ஆட்சிக்கும் கெட்டது. மக்களுக்கு ரொம்ப கெட்டது. கட்சிக்கும் கெட்டது. ஆகையால் தேர்தல் வரை பதவி கொடுத்து விட்டு அதன் பிறகு பதவிகளை எடுத்து விட வேண்டும்.

இந்த விஷயத்தை மூலை முடுக்கெல்லாம் சென்று மக்களிடம் சொல்லி கொடுங்க. இந்தியா முழுக்க பரவலாகப் போய் சேர வேண்டும். இளைஞர்கள் வரணும். நாற்பது நாற்பத்தைந்து வயது இளைஞர்கள் வரணும். அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும். உங்கள் கையில்தான் இருக்கிறது. ஒரே முழக்கம் அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம். இப்ப இல்லேன்னா எப்பவும் இல்ல. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்’’என அவர் தெரிவித்தார்.