காஷ்மீர் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்னாள் முதல் அமைச்சர் பரூக் அப்துல்லா கூறி வரும் நிலையில், அவர் நாட்டில் வகுப்புவாத வன்முறையை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

சர்ச்சை கருத்து

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது பாகிஸ்தானுக்கு சொந்தம் என்று கூறி காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா சர்ச்சையை ஏற்படுத்தினார். அவருக்கு ஆதரவாகநடிகர் ரிஷிகபூர் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவர்கள்இருவரின் மீதும் பீகார் மற்றும் காஷ்மீரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நிதானத்துடன் இல்லை

இந்த விவகாரம் குறித்து, பாஜகவின் மூத்த தலைவர் கோபால கிருஷ்ண அகர்வால் கூறுகையில், பரூக் அப்துல்லா நிதானத்துடன்தான் பேசுகிறாரா என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். எனவே பரூக் அப்துல்லா நாடாளுமன்றத்திற்கு கட்டுப்பட்டு கருத்துக்களை தெரிவிக்க
வேண்டும். இதுபோன்ற சர்ச்சை கருத்துகளை கூறி நாட்டில் வகுப்புவாத வன்முறையை ஏற்படுத்த பரூக் அப்துல்லா முயற்சித்து வருகிறார் என்றார்.

வற்புறுத்த முடியாது

முன்னதாக நேற்று முன்தினம் பேட்டியளித்த பரூக் அப்துல்லா பாஜக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அவர் அளித்த பேட்டியில், உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்களை மிரட்டி பாஜக தலைவர்கள் வாக்குகளை பெறுகின்றனர். இந்தியா அனைவருக்குமானது. இங்கு யாரும் எவரையும் வற்புறுத்த முடியாது. ஏற்கனவே பாஜக ஒரு பாகிஸ்தானை உருவாக்கி விட்டது. இன்னும் எத்தனை துண்டுகளாக்கி எவ்வளவு பாகிஸ்தானை பாஜக உருவாக்கப் போகிறது? என்று கூறியிருந்தார்.