சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் செய்வதோடு தான் நிறுத்திக் கொள்ளப்போவதில்லை திமுகவின் தேர்தல் வியூகத்திலும் தனது பங்கு இருக்க வேண்டும் என்பதை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் தான் முதல் முறையாக கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களில் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட ஆரம்பித்தார். அதற்கு முன்னதாக 2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற வேண்டிய கட்சிகள் குறித்து திமுக தலைவர் கலைஞருக்கு ஆலோசனைகள் மட்டுமே ஸ்டாலின் வழங்கியிருந்தார். ஆனால் 2011 சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி, 2009 நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி திமுகவிற்காக பிரச்சாரம் செய்யும் வேலையை மட்டுமே ஸ்டாலின் பார்த்தார். வேட்பாளர் தேர்வில் கூட மு.க.ஸ்டாலின் தலையிட்டது இல்லை.

அப்போது மு.க.அழகிரி திமுகவில் இருந்த காரணத்தினால் குறிப்பிட்ட சில தொகுதிகளில் தனது ஆதரவாளர்களை வேட்பாளராக்கியதோடு ஸ்டாலின் நிறுத்திக் கொண்டார். தேர்தல் வியூகம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு போன்றவற்றை எல்லாம் கலைஞரே இறுதி செய்து வந்தார். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகியுள்ளது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தாலும் மாவட்டச் செயலாளர் நியமனத்தில் உதயநிதியின் நேரடி தலையீடு இருந்தது. சென்னை மேற்கு மாவட்டத்திற்கு சீனியர்கள் பலர் இருக்க தனக்கு நெருக்கமான சிற்றரசு என்பவரை மாவட்டச் செயலாளர் ஆக்கினார் உதயநிதி.

இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் திமுகவில் இருந்து விலக நேரிட்டது. இதே போன்று தமிழகம் முழுவதுமே மாவட்டச் செயலாளர் நியமனம், தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பு போன்றவற்றில் உதயநிதியின் ஆதிக்கம் இருந்து வருகிறது. கட்சியில் பதவி பெற்று முழுவதுமாக 2 வருடங்கள் கூட நிறைவடையாத சூழலில் தற்போது திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்க வேண்டும், எந்தெந்த கட்சிகள் இருக்க கூடாது, யாருக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதை குறித்தெல்லாம் வெளிப்படையாக பேசக்கூடிய அளவிற்கு உதயநிதியின் செயல்பாடு மாறியுள்ளது.

திமுக தலைவராக கலைஞர் இருந்த போது மு.க.ஸ்டாலின் இளைஞர் அணிச் செயலாளராக மு.க.ஸ்டாலின் இருந்தார். அப்போதெல்லாம் மு.க.ஸ்டாலின் தனக்கு கொடுத்த வேலைகளை மடடுமே செய்வார். தேர்தல் தொடர்பாக பொதுவெளியில் பேசுவதை முற்றிலும அவர் தவிர்த்துவிடுவார். ஆனால் தற்போதைய இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி தனது தந்தை திமுக தலைவர் என்பதை மறந்துவிட்டு தலைவரான ஸ்டாலின் பேச வேண்டியதை எல்லாம் பேசி வருகிறார். உதாரணத்திற்கு மயிலாப்பூர், தியாகராயநகர் தொகுதி இந்த முறை கண்டிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கப்படாது என்று பேசியுள்ளார். இந்த தொகுதியில் கண்டிப்பாக திமுக வேட்பாளர்கள் தான் போட்டியிடுவார்கள் என்று கூறுவது வேறு.

ஆனால் திமுகவிற்கு வெற்றி வாய்ப்புகள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க கூடாது, திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று உதயநிதி பொதுவெளியில் பேசியிருப்பது மு.க.ஸ்டாலினை உதயநிதி ஓவர்டேக் செய்ய முயல்கிறாரா என்கிற கேள்விக்கு காரணமாகியுள்ளது- திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றால் கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை கொடுக்க கூடாது என்று அர்த்தம். அப்படி என்றால் கூட்டணி விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கட்டளையிடுகிறாரா? என்கிற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.

இது தவிர உதயநிதியின் இந்த பேச்சு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை கொதிக்க வைத்துள்ளது. ஏற்கனவே திமுக த லைமை திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை குறைத்துவிட்டது. இந்த நிலையில் உதயநிதியின் இந்த பேச்சு திமுக கூட்டணி கட்சிகளின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. ஏதோ திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எல்லாம் தானம் வழங்குவது போல் தான் தொகுதிகளை ஒதுக்க உள்ளது போல் உதயநிதி பேசியிருப்பது அரசியல் கள நிலவரத்தை முழுமையாக அறிந்து கொள்ளாததன் வெளிப்பாடு என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள். இது போன்ற உதயநிதியின் பேச்சுகள் கூட்டணி கட்சிகளை உள்ளடி வேலை பார்க்கவோ, அல்லது கடைசி நேரத்தில் கழுத்தை அறுக்கவோ காரணமாகிவிடும் என்றும் எச்சரிக்கின்றனர்.