கமல் ஹாசனுக்கு மேடையில் இடம் ஒதுக்காததே கருணாநிதி சிலை திறப்பு விழாவை அவர் புறக்கணித்ததற்கு காரணம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

மறைந்த, தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா, சென்னை, அறிவாலயத்தில், சமீபத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, சிலையை திறந்து வைத்தார். விழாவில் பங்கேற்க, தி.மு.க., சார்பில், கருணாநிதியின் நண்பர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என, பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சினிமா துறையில், கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களான ரஜினி, கமலுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள்.

ஆனால், ரஜினி மட்டுமே விழாவுக்கு வந்திருந்தார். விழா மேடையில், சிறப்பு விருந்தினர்கள் தவிர்த்து, மற்றவர்களுக்கு இடமில்லை என்கிற விபரம், கமலுக்கு முன்கூட்டியே தெரிய வந்ததாம். 'நடிகர் என்ற அந்தஸ்தை தாண்டி, தற்போது, ஒரு கட்சி தலைவராக உள்ளேன். சோனியா, ராகுலுடன், கேரளா, ஆந்திர மாநில முதல்வர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில், மேடையில் அமரவில்லை எனில் எப்படி?' என்று தன், ஆத்திரத்தை, கட்சியினரிடம் வெளிப்படுத்தி, விழாவை, புறக்கணித்திருக்கிறார் கமல். இதனால் கமல் மீது மு.க.ஸ்டாலினுக்கு வருத்தமாம்.

இருக்காதா பின்னே..? முரசொலி பவள விழாவில் ரஜினி பார்வையாளராக அமர்ந்திருக்க, மேடையில் விஐபியாக கலந்து கொண்டார் கமல் ஹாசன். அதே முக்கியத்துவம் தனக்கு இப்போது கிடைக்காது என்பதும் அந்த விழாவை கமல் புறக்கணிக்கக் காரணம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.