திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும், காவேரி மருத்துவமனை டாக்டர்கள் குழு அவரது உடல் நிலையை நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் திமுக செய்ல தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணா நிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவரது ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் நேற்று அவரது உடல் நிலை திடீரென மோசமானதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆஸ்பத்திரி முன்பு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னை நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், காவேரி மருத்துவமனை வெளியிட்ட  அறிக்கையில்,  தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், சிறப்பான மருத்துவ சிகிச்சை மூலம் அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் முக்கிய அறிகுறிகள் தென்படுகின்றன.

தொடர்ந்து அளிக்கப்பட்டு  வரும் சிகிச்சையில் அவர் உடல் நலம் நன்றாக முன்னேறி வருவதாகவும், மருத்துவ உபகரணங்கள் இன்றி அவர் உடல்நலம் சிறப்பாக இருப்பதாகவும்  மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் காவேரி மருத்துவமனை சென்று நேரடியாக கருணாநிதியைப் பார்த்து வந்தனர். இதே போன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றனர்.

இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்ட ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நேற்றிரவு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து கருணாநிதியை மருத்தவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவரது உடல் நிலை நேற்று இருந்ததைப் போல் சீராக உள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் துரை முருகன், காவேரி மருத்துவமனை டாக்டர்கள் கருணாநிதிக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாகவும், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.